விஜயகாந்தை தொடர்ந்து ரஜினி திடீர் அமெரிக்கா பயணம்; காரணம் என்ன?
உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை எடுப்பதற்காக சில நாட்களுக்கு முன்பு தான் தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அமெரிக்கா பயணம் செய்தார். அவரை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு இன்று இரவு பயணம் செய்கிறார்.
2018 ஆம் ஆண்டு முழுவதும் சினிமா படப்பிடிப்புகளில் மிகவும் முழுவீச்சுடன் செயல்பட்டவர் நடிகர் ரஜினிகாந்த். 68 வயதாகும் ரஜினிகாந்த் இந்த ஆண்டில் மற்றும் மூன்று படங்களை நிறைவு செய்துள்ளார். ஜூன் மாதம் அவரது நடிப்பில் காலா திரைப்படம் வெளியானது. அதனைத்தொடர்ந்து நவம்பர் மாதம் 2.0 வெளியாகி மாபெரும் வசூல் சாதனையை படைத்தது வருகிறது. மேலும் அவரது நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது என்ற அதிகாரபூர்வ அறிவிப்புகள் நேற்று வெளியாகின.
படப்பிடிப்புகளில் மட்டுமல்லாமல் அரசியல் நிகழ்வுகளிலும் தம்மை மிகவும் சுறுசுறுப்பாக ஈடுபடுத்தி வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். கடந்த வருடம் டிசம்பர் மாதம் அரசியலுக்கு வருவதை உறுதி செய்த ரஜினி, 'ரஜினி மக்கள் மன்றம்' என்ற அமைப்பை உருவாக்கி பொறுப்பாளர்களையும், நிர்வாகிகளையும் நிர்ணயிப்பதில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மேலும் தாம் தொடங்க இருக்கும் கட்சியில் கடை பிடிக்கப் போகும் சட்டதிட்டங்களை பற்றியும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.
இவ்வாறு இந்த ஆண்டு முழுவதும் ஓய்வே இல்லாமல் உழைத்து வந்த ரஜினிக்கு கட்டாயம் ஓய்வு தேவைப்படும். இந்நிலையில் ஓய்வு எடுப்பதற்காகவும், புத்தாண்டை கொண்டாடுவதற்காகவும் நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் இன்று இரவு அமெரிக்கா பயணம் செய்கிறார். பத்து நாட்களுக்கு மேலாக அங்கு தங்குவதற்கு முடிவு செய்துள்ள ரஜினிகாந்த் ஜனவரி முதல் வார இறுதியில் சென்னைக்கு மீண்டும் திரும்புவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில நாட்களுக்கு முன்பு தான் தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக தனது மனைவியுடன் அமெரிக்கா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.