ஜெயலலிதா மரணம்: சசிகலா, விஜயபாஸ்கர் மீது ஆறுமுகசாமி கமிஷன் குற்றச்சாட்டு..!Jayalalithaa death Sasikala, Vijayabaskar accused by Arumugasamy commission

முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரணை கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த விசாரணை கமிஷன் ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள், அவரது உறவினர்கள், சசிகலாவின் உறவினர்கள், அப்போது பொறுப்பில் இருந்த ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் இல்லத்தில் பணி புரிந்தவர்கள் உள்ளிட்டோரிடம் ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை மேற்கொண்டது.

அனைவரிடமும் விசாரணை மேற்கொண்ட பின்பு, அவர்களது வாக்குமூலத்தை பதிவு செய்த ஆறுமுகசாமி கமிஷன், 608 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம்  தாக்கல் செய்தது. ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் அளித்த இறுதி அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.'

அந்த அறிக்கையில் கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதியன்று இரவு சுயநினைவற்ற நிலையில் போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்ய வேண்டும் என்பது குறித்து மருத்துவர் சுமின் சர்மா விளக்கிய பிறகும் ஆஞ்சியோ சிகிச்சை அவருக்கு அளிக்கப்படவில்லை. லண்டனில் இருந்து வந்த மருத்துவர் ரிச்சர்டு பீலே, ஜெயலலிதாவுக்கு மேல் சிகிச்சை மேற்கொள்ள வெளிநாட்டிற்கு அழைத்தச் தயாராக இருந்தபோதும் அது நடக்கவில்லை.

போயஸ் கார்டனில் மயங்கி விழுந்த ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில அனுமதிக்கப்பட்ட பிறகு நடந்தவை தற்போது வரை பரம ரகசியமாக உள்ளது. இவற்றை எல்லாம் மிஞ்சும் வகையில், ஜெயலலிதா இறந்த தேதி மற்றும் நேரம்  2016 ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு என அப்போலோ மருத்துவமனை அறிவித்திருந்தது.

ஆனால் ஜெயலலிதா உயிரிழந்தது 2016 ஆம் ஆண்டுடிசம்பர் 4 ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் 3.30 மணிக்குள் என்பதுதான் உண்மை. ஜெயலலிதாவின் மரணம் குறித்து அறிவிப்பதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுகிறது. சசிகலா, மருத்துவர் கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு பரிந்துரைப்பதாக அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.