தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
பரபரப்பில் செஸ் ஒலிம்பியாட்; பேனரில் மோடி ஸ்டிக்கர் ஒட்டிய பாஜகவினர்.. அதில் கருப்பு மை பூசிய பெரியார் திராவிட கழகத்தினர்...
தமிழகம், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று முதல், அதாவது ஜூலை 28-இல் ஆரம்பித்து ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் துவக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வர உள்ளார். இதை தொடர்ந்து சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த விளம்பரங்களில் பாரத பிரதமர் மோடியின் படம் இடம் பெறவில்லை. இந்த விளம்பர பேனர்களில், பிரதமர் மோடியின் படம் இல்லாதது குறித்து, பாஜகவினர் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களில் பிரதமர் படம் இல்லை என்பதால், பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு நிர்வாகிகள், பிரதமர் மோடியின் புகைப்படங்களை அரசு விளம்பர பேனர்களில் ஒட்டினர். அதன் பிறகு திமுக அரசுக்கும், திமுக அரசு செய்யும் தவறான செயல்களுக்கு துணை நிற்கும் அதிகாரிகளுக்கும், தவறை உணர்த்திடும் விதமாக, தமிழர் பண்பாட்டை நிலைநாட்டும் வகையில், செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பாரத பிரதமரின் புகைப்படத்தை ஒட்டி உள்ளோம், என பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாடு பிரிவு மாநில தலைவர் அமல் பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.
மேலும் மதுரையில் 75-வது சுதந்திர சுதந்திர தின பவள விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, மத வழிபாட்டுத்தலங்கள், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள், மற்றும் ஒவ்வொரு வீடுகளிலும் தேசிய மூவர்ண கொடியை ஏற்றி பறக்க விட உத்தரவு கோரி, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் திருமாறன், மனு கொடுக்க கட்சி நிர்வாகிகளுடன் தேசியக்கொடியை ஏந்தி வந்திருந்தனர். அந்த சமயத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த, செஸ் ஒலிம்பியாட் விளம்பர பேனர்களில் பாரத பிரதமர் மோடியின் புகைப்படத்தை மூன்று இடங்களில் ஒட்டி விட்டு சென்றனர். மனு கொடுக்க வந்த இடத்தில் பிரதமர் மோடியின் படத்தை அர்ஜுன் சம்பத் ஒட்டியதால் அங்கு ஏற்பட்டது.
இது போலவே புதுக்கோட்டையிலும், நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களிலும் பிரதமர் மோடியின் படத்தை ஓட்டினர். அதுமட்டுமல்லாமல் பிரதமர் மோடியின் படத்தை கைகளில் ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். தமிழக அரசு வைத்திருந்த பேனர்களில் பிரதமர் மோடியின் ஸ்டிக்கர் ஒட்டியது மட்டுமல்லாமல், தனியார் பதாகைகளிலும் பாஜகவினர், பிரதமர் மோடியின் படத்தை ஒட்டியது அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சென்னையில் உள்ள செஸ் ஒலிம்பியாட் விளம்பர பேனர் மீது பாஜகவினர் ஒட்டிய பிரதமர் நரேந்திர மோடி படத்தின் மீது பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்தவர்கள் கருப்பு மை பூசினர். அது மட்டும் இல்லாமல் பிரதமர் மோடியின் படத்தை கிழித்தனர். இதை தொடர்ந்து பிரதமரின் படத்தை கருப்பு மையால் அழித்த பெரியார் திராவிட கழகத்தைச் சார்ந்த சசிகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து பேசிய புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் 'சென்னையில் தேசிய பெருமை வாய்ந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற தயாராகி வருகிறது. ஆனால் எனக்கு ஒரு ஆதங்கம் இருக்கிறது. இது தேசிய உணர்வோடு நடத்தக்கூடிய விழா 186 உலக நாடுகளில் இருந்து வீரர்கள் குவிந்து வருகின்றனர். ஆனால் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் பாரத பிரதமர் மோடியின் படம் இல்லை. இதை தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனிக்க வேண்டும். இனி எல்லா இடங்களிலும் மோடியின் படம் இடம்பெற செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்', என்று தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னையில் போட்டி நடக்க ஸ்டாலின் மட்டும் தான் காரணம் என்று திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் கூறியுள்ளார். 'ரஷ்யாவில் நடக்கவிருந்த ஒலிம்பியாட் தொடர் அங்கு நடந்து கொண்டிருக்கும் போரினால், வேறு நாட்டில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அகிலா இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு அரசுடன் எடுத்த முயற்சிகளால் போட்டி சென்னையில் நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ஊக்கமே இதற்கு காரணம். 200 கோடிகள் செலவு தமிழன் வரி. பிறகு எதற்கு மற்றவரின் படம் என்று திமுக செய்தி தொடர்பாளர் கேள்வி எழுப்பி உள்ளார்.