திமுக எம்.பி ஆ ராசா நேரில்‌ ஆஜராக சிபிஐ சம்மன்... வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு...!!

திமுக எம்.பி ஆ ராசா நேரில்‌ ஆஜராக சிபிஐ சம்மன்... வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு...!!



CBI summons DMK MP Aa Raza to appear in person

திமுக எம்.பி. ஆ.ராசா மேல் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுத்தியதாக திமுக எம்.பி ஆ.ராசா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் 2017-ஆம் வருடம் டெல்லி ஸ்பெஷல் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. அப்போது, 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். 

இந்த தீர்ப்புக்கு எதிராக சி.பி.ஐ. டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதையடுத்து, ஆ.ராசா மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட 16 பேர் மீது கடந்த 2015-ஆம் வருடம் ஆகஸ்டு மாதம் 18-ஆம் தேதி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

ஆ ராசா தனது அமைச்சர் பதவியை பயன்படுத்தி, 1999-ஆம் வருடம் பா.ஜ.க. கூட்டணி அரசில் அமைச்சராக இருந்தது போது 2010 வரையிலான காலகட்டத்தில் கூடுதலாக ரூ.27.92 கோடி அளவுக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ. குற்றம்சாட்டியது. 
இதை தொடர்ந்து ஆ.ராசா வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. டெல்லி, சென்னை, நீலகிரி, திருச்சி, கோவை போன்ற இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. 

மேலும் 2ஜி வழக்கில் கிடைத்த சில ஆவணங்களை வைத்து தான் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்த சோதனையில் வருமான வரி கணக்குகள், நிதிநிலை அறிக்கைகள், நிலையான வைப்பு ரசீதுகள் மற்றும் சொத்து ஆவணங்கள், போன்றவை கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆவணங்கள் கொண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கின் மூலம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணை இப்போது முடிவுக்கு வந்துள்ளது. 2015-ஆம் வருடம் பதிவு செய்யப்பட்ட வழக்கு, சுமார் 7 வருடங்கள் ஆன நிலையில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 

அதில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.5.53 கோடி வரை சொத்து சேர்த்துள்ளதாக திமுக எம்.பி ஆ.ராசா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து, தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவுக்கு சிபிஐ ஸ்பெஷல் கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. ஆ.ராசா உட்பட மூன்று பேர் ஜனவரி 10-ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.