திருப்பதியில் தமிழர்கள் தவிப்பு.. ஆந்திராவில் பந்த் எதிரொலியால் தமிழக பேருந்துகள் நிறுத்தம்
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி, முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுவதால் திருப்பதி சென்றுள்ள தமிழக பக்தர்கள் ஊர் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.
பிரதான எதிர்க்கட்சியான ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தார். அதிகாலை 5 மணி முதல் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் ஆகியோர் மாநிலம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே இந்தப் போராட் டத்தில் காங்கிரஸ் பங்கேற்கவில்லை. இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் ரகுவீரா ரெட்டி கூறும்போது, “சிறப்பு அந்தஸ்து உட்பட மாநிலப் பிரி வினை மசோதாவில் குறிப்பிடப்பட்ட அனைத்து சலுகைகளையும் காங்கிரஸ் ஆதரிக்கிறது. மத்தியில் அடுத்து காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார். எனவே ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் இந்தப் போராட்டம் தேவையற்றது. இதில் காங்கிரஸ் பங்கேற்காது” என்றார்.

இதையடுத்து இன்றைய தினம் ஆந்திரம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் தமிழகத்திலிருந்து திருப்பதி சென்ற பக்தர்கள் ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
தமிழகத்திலிருந்து ஆந்திரம் புறப்பட்ட பேருந்துகளும் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது. நிலைமை சீரானவுடன் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.