பில்கிஸ் பானு விவகாரம்: குஜராத் அரசு மற்றும் மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு..!

பில்கிஸ் பானு விவகாரம்: குஜராத் அரசு மற்றும் மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு..!



Bilgis Bano case Supreme Court orders Gujarat government and central government to respond

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பின்பு ஏற்பட்ட கலவரத்தில், பில்கிஸ் பானு என்பவரின் குடும்பத்தை சேர்ந்த 1 குழந்தை உட்பட  7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் இந்த சம்பவத்தில், பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இந்த கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்த நடந்த வழக்கு விசாரணையில், அவர்கள் 11 பேருக்கும் மும்பை உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த நிலையில், கடந்த 14 ஆண்டுகளாக சிறையில் இருந்த அவர்களை கருணை அடிப்படையில் குஜராத் அரசு சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை செய்தது.

குஜராத் மாநில அரசு குற்றவாளிகளை விடுதலை செய்ததை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் சுபாஷினி அலி, பத்திரிகையாளர் ரேவதி லால் மற்றும் சமூக ஆர்வலர் ரூப் ரேகா ராணி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீடுகள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, விக்ரம் நாத் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தன.

மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, வாதங்களை எடுத்து வைத்தார். மேலும் அவர், "இந்த சூழ்நிலையில், எழுகின்ற ஒரே கேள்வி, தண்டனைக்காலம் குறைப்பு பின்னணியில் நீதித்துறையின் மறு ஆய்வு என்ன என்பதுதான்" என குறிப்பிட்டார். தொடர்ந்து "இந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் ஆவணங்களைப் பார்க்க வேண்டும், தண்டனையை குறைப்பு அல்லது விடுதலை குறித்து தீர்ப்பில் என்ன இருக்கிறது என்பதை அறிய வேண்டும் என்பது மனுதாரர்களின் விருப்பமாக உள்ளது" என்று கூறினார்.

இதனை தொடர்ந்து நடந்த விசாரணைக்கு பின்னர், மேல்முறையீடுகள் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்வதற்கு மத்திய அரசுக்கும், குஜராத் மாநில அரசுக்கும் நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.