பெண் காவலரிடம் செயின் பறிப்பு.. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது - அண்ணாமலை கண்டனம்.!



annamalai-on-tambaram-chain-snatching-18-january-2025

 

சென்னையில் உள்ள தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர் பகுதியைச் சேர்ந்தவர் இந்திரா. இவர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், காவலராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று சேலையூர் தேவராஜ் தெருவில் இந்திரா நடந்து வந்தார். அப்போது, அவரை 2 பேர் கொண்ட இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், இந்திரா தனது வீட்டிற்குள் செல்லும்போது அவரின் கழுத்தில் இருந்த 8 சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். 

உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஆங்காங்கே சோதனை நடத்தப்பட்டது. இதனால் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இருசக்கர வாகனத்தை கைவிட்டு ஓட்டம் பிடித்தனர். அவர்களுக்கு அதிகாரிகள் வலைவீசியுள்ளனர். இதனிடையே, கொள்ளையர்கள் இதேபோல 8 இடங்களில் குற்றச்செயலில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. இந்த விஷயம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. 

இதையும் படிங்க: தலைசிறந்த தேசியவாதி எம்.ஜி.ஆர் - அண்ணாமலை புகழாரம்.!

அண்ணாமலை கண்டனம்

இதனிடையே, செயின் பறிப்பு சம்பவம் அதிர்ச்சியை தருவதாகவும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதாகவும் பாஜக அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரின் ட்விட் பதிவில், "சென்னை தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட எட்டு இடங்களில்,  ஒரே நாளில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியையும், பொது மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

குறிப்பாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் காவலர், சீருடையில் இருக்கும்போதே அவரது கழுத்தில் இருந்த தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு சென்றிருக்கின்றனர். திமுக அரசு, சமூக வலைத்தளத்தில் இயங்கும் பாஜக தொண்டர்களைப் பின்தொடர்வதையே காவல்துறையின் முழுநேரப் பணியாக மாற்றியதன் விளைவு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, பெண் காவலரிடமே செயின் பறிப்புச் சம்பவம் நடக்கும் அளவுக்கு, தமிழக மக்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது. 

தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தல்

திமுக அரசு, இனியும் காவல்துறையினரை, அரசியல் பழிவாங்குதலுக்குப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு, சமூக விரோதிகளுக்கு எதிராக, காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும். காவல்துறையினரும், திமுகவின் அதிகார துஷ்பிரயோகங்களைப் புறக்கணித்துவிட்டு, தங்கள் முதற்கடமையான சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.

 

இதையும் படிங்க: #Breaking: சீமானுக்கு ஆதரவு: "நான் தரேன் ஆதாரம்" அண்ணாமலை பாய்ச்சல்.!