சென்னையில் பயங்கரம்: ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் அடித்து கொலை! வேலைக்காரர்களுக்கு போலீசார் வலைவீச்சு
சென்னை ஆவடியில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களான வயதான தம்பதியினரை கொலை செய்துவிட்டு, 40 பவுன் நகைகளை திருடிச் சென்ற வீட்டு வேலைக்காரர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு அச்சகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஜெகதீசன் மற்றும் அவரது மனைவி விலாசினி ஆவடி சேக்காடு அய்யப்பன் நகர் மெயின் ரோட்டில் வசித்து வந்தனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அந்த பண்ணை வீட்டில் அவர்கள் இருவர் மட்டுமே வாழ்ந்து வந்துள்ளனர். வயதான காரணத்தினால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு தம்பதியினரை வீட்டு வேலைக்காக பணியில் அமர்த்தியுள்ளனர். ஆனால் அவர்கள் வேலையை விட்டு நின்று விடவே, பின்னர் 10 நாட்களுக்கு முன்பு ஆந்திராவைச் சேர்ந்த மற்றொரு தம்பதியினரை வேலைக்கு அமர்த்தி உள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் ஜெகதீசன், விலாசினி இருவரும் வெளியில் வரவில்லை. வேலையாட்களையும் காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். அப்போது வயதான அந்த கணவன்- மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் அறையில் பிணமாக கிடந்தனர். அவர்களது தலையில் பலமாக தாக்கியதற்கான அடையாளங்கள் காணப்பட்டன.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், நகை-பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் இருவரும் தலையில் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் பீரோ உடைக்கப்பட்டு தங்கம், வைர நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வீட்டின் வெளியே இருந்த இருசக்கர வாகனமும் திருடு போயுள்ளது. இரும்புக் கம்பியால் தாக்கி தம்பதி கொல்லப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போது, வீட்டு வேலைக்காக சேர்க்கப்பட்ட ஆந்திர தம்பதி மீது சந்தேகம் எழுந்துள்ளது. வீட்டை பராமரிப்பதற்காக 10 நாட்களுக்கு முன் ஆந்திராவைச் சேர்ந்த தம்பதியை ஜெகதீசன் வேலைக்குச் சேர்த்துள்ளார். வீட்டின் வளாகத்திலேயே உள்ள சிறிய வீட்டில் அவர்களை ஜெகதீசன் தங்க வைத்துள்ளார்.
குழந்தையுடன் தங்கி இருந்த நிலையில் வேலைக்காரர்கள் தலைமறைவாகியுள்ளனர். மேலும் அவர்களுடைய விவரத்தையும் சேகரிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. ஜெகதீசன் வீட்டில் சிசிடிவி கேமராக்களும் இல்லாததால் குற்றவாளிகளை அடையாளம் காணமுடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.