MI-17V5 ரக ஹெலிகாப்டரில் முக்கிய அம்சங்கள் என்ன?.. விபத்து ஏன்?..!

MI-17V5 ரக ஹெலிகாப்டரில் முக்கிய அம்சங்கள் என்ன?.. விபத்து ஏன்?..!


What is Mi 17V5 Army Helicaptor

IAF MI-17V5 இராணுவ ஹெலிகாப்டர் என்றால் என்ன? அதன் விபரங்கள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.

தமிழகத்தில் உள்ள நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்ஸ்டனில் அமைந்துள்ள இராணுவ பயிற்சிப்பள்ளிக்கு வருகைதரவிருந்த இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்த IAF MI-17V5 ரக ஹெலிகாப்டர், வானிலை காரணமாக குன்னூரில் தரையிறங்க முடியாமல், பின்னர் சூலூர் விமானப்படை தளத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது. இதன்போது, ஏற்பட்ட விபத்தில் விமானத்தில் பயணித்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ தலைமை தளபதியின் நிலை குறித்து அறிவிக்கப்படாத நிலையில், அவர் மிகவும் ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

MI 17V5

MI-17V5 ஹெலிகாப்டர் : 

MI-17V5 ஹெலிகாப்டர் இந்திய விமானப்படையினால் பயன்படுத்தப்படும் நவீன போக்குவரத்து ஹெலிகாப்டர் ஆகும். இந்த ஹெலிகாப்டர் சரக்கு ஹெலிகாப்டராகவும், கனகர பொருட்களை சுமந்து செல்லும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. விமானத்தில், விமானி உட்பட 36 பேர் பயணம் செய்யலாம். இதனைப்போல 10 ஆயிரம் கிலோவுக்கு மேல் சுமந்து செல்லும் திறனை கொண்டது. வான்வழி தாக்குதல் படைகளையும், உளவுப்படைகளும் சமாளிக்கும் திறனையும் கொண்டது.

நவீனமான ஏவியோனிக்ஸ் அமைப்பு பொருத்தப்பட்ட MI 17V5 ஹெலிகாப்டர், எவ்விதமான புவியியல் மற்றும் தட்பவெட்ப நிலையிலும், இரவு பகலாக, மோசமான வானிலையில் தொடர்ந்து இயங்கும் திறனை கொண்டது. இந்திய விமானப்படையை பொறுத்த வரையில், MI-17V5 ஹெலிகாப்டர் சரக்குகளை ஏற்றிச்செல்வதற்கு மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் பல்வேறு மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளது. சூலூர் விமானப்படை தளத்திலும் இந்த ரக ஹெலிகாப்டர்கள் உள்ளன.

MI 17V5

சோவியத் ரஷியாவின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட MI-17V5 ஹெலிகாப்டர் இரவிலும், மோசமான வானிலை காலத்திலும், அனுபவமில்லா அவசர கதியில் தரையிறங்கும் திறனையும் கொண்டது. இந்த ஹெலிகாப்டரில் அதிகபட்சமாக 13 ஆயிரம் கிலோ எடையை ஏற்றி பயணிக்கலாம். அதிகபட்சமாக மணிக்கு 250 கி.மீ வேகத்திலும் பயணம் செய்யும். கடந்த சில வருடத்திற்கு முன்னதாக ரஷிய நாட்டிடம் இருந்து 80 MI-17V5 ரக ஹெலிகாப்டரை இந்தியா வாங்கியது. 

ரஷியாவில் தயார் செய்யப்பட்ட MI-17V5 ஹெலிகாப்டர், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் என, நாட்டின் மிகமுக்கிய நபர்கள் நம்பிக்கையுடன் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர் விமானம் ஆகும். இந்த ரக விமானத்தின் கடைசி தொகுதி 2018 ஆம் வருடம் இந்தியாவிற்கு வழங்கப்பட்டது. கடந்த காலங்களில் இதுபோன்ற துயர பெரும் விபத்துகள் MI-17V5 ரக ஹெலிகாப்டரால் ஏற்படவில்லை. 

MI 17V5

விபத்துக்கான காரணம்:

விபத்து நடைபெற்ற பின்னர் முதற்கட்ட விசாரணைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் நிலையில், வானிலை, இயந்திர கோளாறு, விபத்தில் சிக்கிய பின்னர் எரிபொருள் கசிவு என்று பல காரணங்கள் தொடர்ந்து கூறப்படுகிறது. விமானத்தில் உள்ள Black Box என்று அழைக்கப்படும் கருப்பு பெட்டி மீட்கப்பட்டு, அதில் பதிவாகியுள்ள உரையாடல் மற்றும் இயந்திரத்திறன் போன்றவை சரிபார்க்கப்ட்டதும் ஹெலிகாப்டர் விபத்திற்கான சரியான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.