கொள்ளை முயற்சியில் பறிபோன திருடனின் உயிர்: ஹவுஸ் ஓனரை கைது செய்த போலீசார்..!

கொள்ளை முயற்சியில் பறிபோன திருடனின் உயிர்: ஹவுஸ் ஓனரை கைது செய்த போலீசார்..!


thiefs-life-lost-in-attempted-robbery-police-arrested-t

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், உடும்பஞ்சோலை அருகேயுள்ள செம்மன்னாரில் திருடப் போன வீட்டின் அருகில் திருடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளது. திருட்டு நடந்த வீட்டின் உரிமையாளர் ராஜேந்திரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருடுவதற்காக வந்து உயிரிழந்தவர் சேனாபதி வட்டப்பாறையைச் சேர்ந்த ஜோசப் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. கொள்ளை முயற்சியின் போது தப்பியோட முயன்ற ஜோசப்புடன் நடந்த போராட்டத்தில், அவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளார் என்பது பிரேத பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. கழுத்து எலும்புகள் உடைந்து மூச்சுக் குழாயில் நுழைந்ததே மரணத்திற்குக் காரணம் என்று பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது.

முகத்தில் கடித்து வைக்கப்பட்ட வீட்டு உரிமையாளர் ராஜேந்திரன், கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த கொள்ளை முயற்சி, கடந்த  செவ்வாய்கிழமை அதிகாலை 5 மணியளவில் நடந்துள்ளது. செம்மன்னாரில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநராக பணிபுரியும் கொன்னக்காபரம்பில் ராஜேந்திரன் என்பவரது வீட்டில் நடந்த கொள்ளை முயற்சியில் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன.

ராஜேந்திரன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து அவர் படுத்திருந்த அறைக்குள் நுழைந்த ஜோசப், அலமாரியை திறக்க முயற்சி செய்துள்ளார். சத்தம் கேட்டு எழுந்த ராஜேந்திரனை கண்டு ஜோசப் வெளியே ஓடியுள்ளார். இதற்கிடையே துரத்தி பிடிக்க முயன்றபோது, ஜோசப் ராஜேந்திரனை கடித்து வைத்ததாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து திருட வந்த ஜோசப்பை கொலை செய்த குற்றத்துக்காக ராஜேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.