கடனை அடைக்க கணவர் ஆடிய நாடகம்.. மனைவிக்கு நடந்த கொடூர சம்பவம்..!The drama played by the husband to pay off the debt.. The horrible incident happened to the wife..

மத்திய பிரதேசத்தில் ராஜ்கார் மாவட்டத்தை சேர்ந்தவர் பத்ரிபிரசாத் மீனா. இவருக்கு அதிகளவில் கடன்சுமை இருந்துள்ளது. அவற்றை எப்படி அடைப்பது என தெரியாமல் தவித்து‌ வந்துள்ளார். இதனால் இணையதளத்தில் உள்ள பல்வேறு வீடியோக்களை பார்த்து வந்துள்ளார். அதன்பின்னர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார். இதையடுத்து அவரது மனைவி பூஜா பெயரில் இன்சூரன்ஸ்  செய்தார். 

இது குறித்து போலீசாரின் விசாரணையில் வெளிவந்த தகவல் பின்வருமாறு, பத்ரிபிரசாத், நான்கு பேர் சேர்ந்து அவரது மனைவியை கொன்று விட்டனர் என்று கூறி காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளார். காவல்துறையினரும் அவர்களை தேடி அலைந்தனர். இந்நிலையில், அந்த நான்கு பேரும் சம்பவம் நடந்தபோது அந்த பகுதியில் இல்லை என்று விசாரணையில் தெரியவந்தது. 

இதை தொடர்ந்து, காவல்துறையினரின் சந்தேகம் பூஜாவின் கணவர் பத்ரி பிரசாத் மீது திரும்பியது. உடனே அவரை விசாரிக்க ஆரம்பித்தனர் அதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மனைவி பூஜாவை போபால் சாலையில் வைத்து, மனஜோட் பகுதியருகே இரவு 9 மணியளவில்  பத்ரி பிரசாத் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் பூஜா காயமடைந்து இருக்கிறார். பின்னர், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். 

ஏற்கனவே அவர், தனது கடன்களை அடைக்க இணையதளத்தில் வீடியோக்களை தேடி பார்த்த பிறகு, மனைவியை காப்பீடு செய்யும்படி வற்புறுத்தி இருக்கிறார். அதன்பிறகு அவரை கொலை செய்து விட்டு காப்பீடு பணத்தை வாங்கி கொள்ளலாம் என்று நினைத்துள்ளார். ஆனால், அவரது திட்டம் நிறைவேறுவதற்கு முன்பு காவல்துறையினரிடம், சிக்கி கொண்டார். பத்ரிபிரசாத்துடன் தொடர்புடைய கூட்டாளி ஒருவர் காவல் துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார். குற்ற சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இரண்டு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.