அரசியல் இந்தியா சினிமா

அவர் திரையில் மட்டுமல்ல; நிஜத்திலும் நாயகன்தான்! நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக களமிறங்கிய சீமான்!

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது. இதற்கிடையே நீட் தேர்வு அச்சத்தால் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் நடிகர் சூர்யா இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்வதை போல அவலம் எதுவும் இல்லை.

அநீதியான தேர்வு முறைகளுக்கு தங்கள் பிள்ளைகளை வாரிக்கொடுத்துவிட்டு வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிற பெற்றோர்களுக்கு இது வாழ்நாள் தண்டனையாக மாறுகிறது. மாணவர்களின் நலன் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லாத நம் கல்விமுறையில், இனி பெற்றோர்களும், ஆசிரியர்களுமே விழிப்புடன் இருக்கவேண்டும் என வேதனையுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஆதரவுகளும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சூர்யாவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  ஆதரவு தெரிவித்து தனது ட்விட்டர் பதிவில்,  நீட் தேர்வு எனும் சமூக அநீதிக்கெதிராக பொறுப்புணர்வோடும், கண்ணியத்தோடும் அறச்சீற்றம் செய்த அன்புத்தம்பி சூர்யா அவர்களது கருத்துகளை முழுமையாக ஆதரிக்கிறேன். அவருக்கு என்னுடைய  வாழ்த்துகளும், பாராட்டுகளும். சூர்யா திரையில் மட்டுமல்ல; நிஜத்திலும் நாயகன்தான் என கூறியுள்ளார்.
 


 


Advertisement