அதிகரித்து வரும் குழந்தை பாலியல் குற்றங்கள்; நாடு முழுவதும் சிபிஐ அதிரடி சோதனை..!!



Rising child sex crimes; CBI raids all over the country..!!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தொடர்பாக ஒரே நேரத்தில் நாடு முழுவதும் 56 இடங்களில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

சமீப காலமாக குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் குழந்தைகள் பல்வேறு வகையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வந்த நிலையிலும் கட்டுக்குள் வராமல் ஆங்காங்கே குற்றங்கள் நடந்து வருகின்றன. ஆதரவற்றநிலையில் இருக்கும் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த சூழ்நிலையை சரிசெய்ய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

தொடர்ந்து இதுபோன்ற குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை துன்புறுத்தல்கள் நடந்து வருவதை கண்காணித்து அதிரடியாக கைது போன்ற சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல், பகிர்தல் மற்றும் பதிவிறக்கம் செய்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

குழந்தைகளுக்கு எதிரான இந்த பாலியல் குற்றங்கள் தொடர்பாக சி.பி.ஐ.யின் சிறப்பு பிரிவு தீவிர விசாரணையையும் செய்து வருகிறது. இணையம் வழியாக இம்மாதிரி குற்ற செயல்களை செய்பவர்களுக்கு எதிராக மேகா சக்ரா என்ற பெயரில் சி.பி.ஐ. நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும் குழந்தைகள் பாலியல் வன்முறை வீடியோக்களை வெளியிட்டது தொடர்பான இரண்டு வழக்குகள் குறித்து நேற்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் நடத்தினர்.

அந்த வகையில் 19 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட 56 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. 'மேகா சக்ரா' ஆபேரஷன் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் கடந்த வருடம் நடத்தப்பட்ட ஆபரேஷன் கார்பன் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இன்டர்போல் அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை அளித்த தகவல்களை அடிப்படையாக வைத்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இந்த சோதனையில் சிக்கிய ஆவணங்கள் மற்றும் தகவல்கள் பற்றி உடனடி தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. எனினும் பல்வேறு மாநிலங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட இந்த சோதனை நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.