ரயிலில் அதற்காக அவதிப்பட்ட இளம்பெண்; உடனடியாக உதவிய அதிகாரிகள்! குவியும் பாராட்டு

ரயிலில் அதற்காக அவதிப்பட்ட இளம்பெண்; உடனடியாக உதவிய அதிகாரிகள்! குவியும் பாராட்டு



railway-officers-helped-girl-immediately-for-menstrual

பெங்களூரு-பல்லாரி-ஹோஸ்பெட் வழியாகச் சென்ற ரயிலில் பயணித்த இளம்பெண் ஒருவருக்கு எதிர்பாராத நேரத்தில் திடீரென வந்த மாதவிடாய் காரணத்தால் அந்தப் பெண் வலியால் துடித்துள்ளார். அந்த பெண்ணின் நண்பர் டுவிட்டர் மூலம் அளித்த தகவலின்படி ரயில்வே அதிகாரிகள் அந்த பெண்ணிற்கு தேவையான வசதிகளை உடனடியாக செய்து கொடுத்துள்ளனர்.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது என்ற வள்ளுவரின் கூற்றிற்கு ஏற்ப ரயில்வே அதிகாரிகள் செய்த ஒரே உதவி சிறியதாக இருந்தாலும் அந்த சமயத்தில் அந்தப் பெண்ணிற்கு கிடைத்த அந்த உதவி மிகப் பெரியது. 

கடந்த திங்கட்கிழமை இரவு 10 மணி அளவில் விஷால் என்பவர் பெங்களூரு-பல்லாரி-ஹோஸ்பெட் வழியாக செல்லும் ரயிலில் பெங்களூரு ரயில் நிலையத்தில் ஏறியுள்ளார். விஷால் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே ரயிலில் அந்த இளைஞரின் பெண் தோழி ஒருவரும் பயணம் செய்துள்ளார். அப்போது எதிர்பாராத நேரத்தில் திடீரென அந்த பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப் பெண் வலியால் துடித்துள்ளார். மேலும் அவர் அந்த சமயத்தில் தேவையான பொருட்களை கையில் எடுத்து வரவில்லை.

railway employee

அந்த ரயில் அடுத்த நாள் காலை 9 மணிக்குதான் பல்லாரி ரயில்வே நிலையத்தில் சென்றடையும். சிறிது நேரம் தயங்கி கொண்டே வந்த அந்தப் பெண் விஷாலிடம் தன்னுடைய நிலைமையை பற்றி கூறியுள்ளார். அந்த சமயத்தில் சமயோஜிதமாக சிந்தித்த விஷால் அந்த பெண்ணிற்காக இந்தியன் ரயில்வே சேவா மூலம் உதவி கோர முடிவெடுத்தார். 

இரவு 11 மணியளவில் ரயில் யஸ்வந்த்ப்பூர் ரயில் நிலையத்தை கடந்த சமயத்தில் விஷால் ட்விட்டரில் ஒரு பதிவு செய்தார். அதில் ஹோஸ்பெட் ரயிலில் பயணம் செய்யும் ஒரு பெண்ணிற்கு அவசர உதவி தேவைப்படுகிறது. அவருக்கு குறிப்பிட்ட மாத்திரைகள் மற்றும் அந்த சமயத்தில் தேவையான பொருட்கள் தேவைப்படுகிறது என பதிவிட்டு அந்தப் பெண்ணின் இருக்கை எண்கள் குறித்த விவரத்தையும் தெரிவித்திருந்தார். அந்த ட்வீட்டில் இந்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியன் ரயில்வே துறை, மற்றும் irctc ஆகிய ஆகியோரின் ட்விட்டர் பக்கங்களை இணைத்தார்.



விஷாலின் ட்விட்டை கண்ட ரயில்வே அதிகாரிகள் உடனடியாக அதற்கு பதிலளித்தனர். அதில் அந்தப் பெண்ணின் பிஎன்ஆர் நம்பர் மற்றும் அலைபேசி எண்கள் குறித்த விவரங்களை கேட்டனர். அதோடு மட்டுமில்லாமல் ரயிலில் இருந்த அதிகாரி ஒருவர் அடுத்த 6 நிமிடத்தில் வந்து அந்த பெண் குறித்த தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளார். 

அதனைத் தொடர்ந்து சரியாக இரண்டு மணி அளவில் ரயிலானது அரசிகெரே ரயில் நிலையத்தில் நின்ற பொழுது மைசூரை சேர்ந்த ரயில்வே அதிகாரிகள் அந்த பெண்ணிற்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் கொண்டு வந்து கொடுத்தனர். ரயில்வே அதிகாரிகளின் இந்த துரித நடவடிக்கையை கண்டு ரயிலில் பயணம் செய்த அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். மேலும் உடனடியாக நடவடிக்கை எடுத்த ரயில்வே அதிகாரிகளுக்கு அந்தப் பெண்ணும் அவரின் நண்பரும் மற்றும் சக பயணிகளும் நன்றியை தெரிவித்தனர்.