வெடிகுண்டு வீசி லாரி டிரைவர் படுகொலை... வெளியான பரபரப்பு பின்னணி.!
புதுச்சேரி மாநிலம் முதலியார் பேட்டை சேர்ந்த லாரி டிரைவர் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலம் முதலியார் பேட்டை சிமெண்ட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ். 34 வயதான இவர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இவரது உறவினர் ஒருவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் நேற்று அவரது இறுதிச் சடங்கிற்கு சென்றுள்ளார். அப்போது இறந்தவரின் உடலை எங்கு அடக்குவது என்பது தொடர்பாக உறவினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

இறந்தவரின் உடலை அவரது சொந்த ஊரான தென்னஞ்சாலை என்ற இடத்தில் தான் அடக்க வேண்டும் என ராஜ் மற்றும் சில உறவினர்கள் கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளனர். இது தொடர்பாக இவர்களுக்கும் வேறு ஒரு தரப்பினருக்குமிடையே கடுமையான மனக்கசப்பு ஏற்பட்டிருக்கிறது. ஒரு வழியாக உடலை அடக்கி விட்டு அனைவரும் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
நேற்று இரவு வீடு திரும்பிய ராஜ் அருகிலிருக்கும் கடைக்கு சென்று இருக்கிறார். அப்போது இவரை பின்தொடர்ந்து வந்த கும்பல் இவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் பற்றிய தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வெடிகுண்டு வீசி கொலை செய்த கொலையாளிகளை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.