23 லட்சம் சம்பளத்தை மொத்தமாக திருப்பி கொடுத்த பேராசிரியர்.! அவர் சொன்ன வியக்க வைக்கும் காரணம்.!professor returns his salary

கடன் கொடுத்த பணத்தையே திரும்ப வசூலிக்க முடியாமல் தவிக்கும் இந்த காலத்தில், பணியே செய்யாமல் எப்படி சம்பளம் பெறுவது என வாங்கிய 23 லட்சம் சம்பளத்தினையும் பேராசிரியர் ஒருவர் திருப்பி கொடுத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் லாலன் குமார். 33 வயது நிரம்பிய இவர் அந்த கல்லூரியில் இந்தி பாடம் எடுத்து வருகிறார். இந்தநிலையில் இவர் பல்கலைக்கழக பதிவாளரிடம் 23 லட்சத்து 82 ஆயிரத்து 228 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இந்த தொகையானது, லாலன் குமார் 2019ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளில் பெற்ற ஊதியத்தொகை ஆகும்.

இதுகுறித்து உதவி பேராசிரியர் கூறிய காரணம் பலரையும் வியக்க வைத்துள்ளது. அவர் கூறுகையில், பாடம் எடுக்காமல் ஊதியம் பெற எனது மனசாட்சி அனுமதிக்கவில்லை. ஆன்லைன் வகுப்புகளின்போது கூட இந்தி வகுப்புகளுக்கு ஒரு சில மாணவர்களே வந்தனர். ஐந்து ஆண்டுகள் கற்பிக்காமல் ஊதியம் பெற்றால் அது எனது கல்வி இறந்ததற்கு சமம் என தெரிவித்துள்ளார். இந்தநிலையில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.