காவல் நிலையத்தை சூறையாட முயன்ற பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா.. 9 காவலர்கள் காயம்., தடியடியில் 30 பேர் படுகாயம்..!

காவல் நிலையத்தை சூறையாட முயன்ற பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா.. 9 காவலர்கள் காயம்., தடியடியில் 30 பேர் படுகாயம்..!



Mangalore Uppinangady Police Station PFI Protesters Attacked 9 Police After Lathy Charge 30 Injured

பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பால் காவல் நிலையம் சூறையாட முயற்சி நடந்ததில் எஸ்.பி உட்பட 9 காவலர்கள் காயம் அடைந்தனர். காவலர்கள் நடத்திய தடியடியில் போராட்டக்காரர்கள் 30 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள தக்ஷிண கன்னடா மாவட்டத்தில் உள்ள உப்பினங்குடி காவல் நிலையம் எதிரே, நேற்று (டிச. 14) போராட்டம் நடத்திய பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா (PFI) தொண்டர்கள், திடீரென காவல் நிலையத்திற்குள் புகுந்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலில் புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. குமார் உட்பட 9 காவல் துறையினர் காயம் அடைந்துள்ளனர். 

தகவல் அறிந்து வந்த கூடுதல் காவல் துறையினர், போராட்டக்குழுவை விரட்டியடித்த நிலையில், காவல் துறையினர் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டதாகவும், எதிர்தரப்பு சார்பாளர்களை வைத்து தங்களின் மீது தாக்குதல் நடத்திவிட்டு கொலை முயற்சி செய்திருப்பதாகவும், இதனால் தங்களின் மசூதி இமாம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது. 

mangalore

காவல் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கையில், "உப்பினங்குடி பகுதியில் கடந்த வாரம் இருநபர்கள் தாக்கிக்கொண்டது, இந்து - முஸ்லீம் மோதலாக மாறியுள்ளது. கடந்த டிச. 6 ஆம் தேதி மீன் விற்பனையாளர் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில், கடந்த டிச. 13 ஆம் தேதி முகமது சினான் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். இவரது வாக்குமூலத்தின் பேரில், டிச. 14 ஆம் தேதி முகமது ஜகாரியா, முஸ்தபா மற்றும் ஹமீத் ஆகியோர் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். 

இவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த டிச. 5 ஆம் தேதி உப்பினங்குடி அருகேயுள்ள இழந்திலா கிராமத்தில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக டிச. 6 தாக்குதல் நடந்தது உறுதியாகவே, டிச. 5 ஆம் தேதி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட ஜெயராம் உட்பட சிலரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அடுத்தடுத்த தாக்குதல், பதில் தாக்குதல் பதற்றமான சூழல் ஏற்பட, பாப்புலர் பிராண்ட் இந்தியா அமைப்பும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. 

mangalore

காவல் துறையினர் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட இருதரப்பும் கைது செய்துவிட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர். இதனை ஏற்றுக்கொள்ளாத பாப்புலர் பிராண்ட் அமைப்பு, டிச. 14 ஆம் தேதி கைது செய்யப்பட்ட முஸ்லீம் இளைஞர்களை விடுவிக்கக்கூறி உப்பினங்குடி காவல் நிலையம் எதிரே போராட்டம் நடத்தியுள்ளது. 

போராட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் காவல் துறையினருக்கு எதிராக கோஷமெழுப்பியவாறு, நகரில் பேரணியும் நடத்தியுள்ளனர். இவர்களுடன் அங்கு சுற்றுவட்டாரத்தில் முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதியில் இருந்து அவர்கள் தரப்பு மக்களும் வந்து சேர்ந்துகொள்ள, மீண்டும் உப்பினங்குடி காவல் நிலையம் வந்த போராட்டக்குழு, கூரிய ஆயுதத்துடன் காவல் நிலையத்தில் நுழைய முயற்சித்துள்ளது. 

பணியில் இருந்த காவலர்கள் போராட்டக்குழுவை தடுக்க முயற்சித்த போது, பெண் காவல் அதிகாரிகள் உட்பட பலரின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கும்பலை கலைக்க காவல் துறையினர் தடியடி நடத்திய நிலையில், போராட்டக்குழு ஆயுதம் மற்றும் சோடா பாட்டில் வைத்து காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலின் போது எஸ்.பி உட்பட 9 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காயம் அடைந்துள்ளனர். 

mangalore

கற்களை வீசி வாகனத்தை சேதப்படுத்திய போராட்டக்குழு, மசூதிக்குள் சென்று தஞ்சம் புகுந்தது" என்று காவலர்களின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், காவல் துறையினர் நடத்திய தாக்குதலில் மசூத் இமாம் உட்பட பலரும் கொடூரமாக காயம் பட்டு இருப்பதாக, அவர்கள் தரப்பில் இணையத்தில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதனால் சர்ச்சை சூழல் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பகுதியில் 144 தடை உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில், இயல்பு நிலை லேசாக திரும்பினாலும், அசம்பாவிதத்தை குறைக்க 144 தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.