மகனை உட்கார வைத்து 105 கி.மீ சைக்கிள் மிதித்த தந்தை.! நெஞ்சை நெகிழவைக்கும் உண்மை சம்பவம்.!
கல்வி பயிலாத தந்தை ஒருவர் தனது மகனை 10 ஆம் வகுப்பு தேர்வு எழுத வைப்பதற்காக 105 கிலோ மீட்டர் சைக்கிள் அழைத்துச்சென்று தேர்வு எழுத வைத்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஷோபிராம் (38). இவர் கல்வியறிவற்றவர் என்றாலும், கல்வியின் முக்கியத்துவத்தை நன்கு புரிந்துகொண்டவர். இந்நிலையில் இவரது மகன் ஆஷிஷ்(15) 10 ஆம் வகுப்பு படித்துவந்த நிலையில் அவர் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்துவிட்டார்.
தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்காக "ருக் ஜன நஹின்" என்ற திட்டத்தின் கீழ் அம்மாநில அரசு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கி தேர்வு நடத்த ஏற்பாடு செய்தது. இந்த தேர்வு மையம் ஷோபிராம் இருக்கும் பகுதியில் இருந்து 105 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
இந்த வாய்ப்பை தவறவிட்டால் தனது மகன் அடுத்த தேர்வுக்காக மேலும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என உணர்ந்த ஷோபிராம் தனது மகனை எப்படியும் தேர்வு எழுத வைக்கவேண்டும் என முடிவு செய்துள்ளார். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்துக்கு முடக்கப்பட்டுள்ளதால் 105 கிலோ மீட்டரை எப்படி கடப்பது என சந்தேகம் எழுந்துள்ளது.
கார் ஏற்பாடு செய்து சென்றுவரும் அளவுக்கு வசதி இல்லை. வாகனம் கொடுத்து உதவவும் யாரும் முன்வரவில்லை. இந்நிலையில் சில நாட்களுக்கு தேவையான சாப்பாடு, தண்ணீர் ஆகிவற்றை எடுத்துக்கொண்டு 105 கிலோ மீட்டர் தூரத்தை தனது சைக்கிள் மூலம் கடக்க முடிவு செய்துள்ளார் ஷோபிராம்.
அதன்படி திங்கள்கிழமை கிளம்பிய அவர்கள் சைக்கிளில் பயணம் செய்து, இரவு மட்டும் ஆங்காங்கே சிறிது ஓய்வு எடுத்துவிட்டு மறுநாள் காலை தார் நகரத்தில் உள்ள தேர்வு மையத்திற்கு சரியான நேரத்திற்கு சென்றுள்ளனர்.
தான் கல்வி பயிலாவிட்டாலும் தனது மகன் தேர்வில் வெற்றிபெற்று படித்து பெரிய ஆளாக வரவேண்டும் என ஆசைப்பட்டு, மகனை 105 கிலோமீட்டர் சைக்கிள் வைத்து மிதித்துவந்த தந்தையின் தன்னலமற்ற அன்பு அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.