இந்தியா

75 வயது மனைவியை கொலை செய்து 80 வயது கணவர் தற்கொலை.. 6 பிள்ளைகள் இருந்தும் விபரீத செயல்..!

Summary:

75 வயது மனைவியை கொலை செய்து 80 வயது கணவர் தற்கொலை.. 6 பிள்ளைகள் இருந்தும் விபரீத செயல்..!

நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்த மனைவியை கொலை செய்த கணவர், தானும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகம் ஆலப்புழா அருகே நடந்துள்ளது.

கேரளா மாநிலத்தில் உள்ள ஆலப்புழா, கைனகிரி பகுதியை சேர்ந்தவர் ஜோசப் (வயது 80). இவரின் மனைவி லீலம்மா (வயது 75). இவருக்கு 6 மகன், மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்து, தங்களின் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதனால் ஜோசப் - லீலம்மா கைனகிரியில் வசித்து வருகிறார்கள். 

கடந்த 10 வருடத்திற்கு முன்னதாக லீலம்மாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே, அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தும் பலனில்லை. வீட்டிலேயே படுத்த படுக்கையாக இருந்துள்ளார். 

இந்த நிலையில், கடந்த சில வருடத்திற்கு முன்னதாக ஜோசப்புக்கு புற்றுநோய் உறுதியாகவே, அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவர்களின் குழந்தைகள் பெற்றோரை தங்களுடன் வந்து வாழ அழைப்பு விடுத்த நிலையில், சொந்த ஊரை விட்டு நாங்கள் வரமாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தன்று, வீட்டின் அருகே இருக்கும் மரத்தில் ஜோசப் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில், அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், ஜோசப்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவரின் வீட்டில் சென்று சோதனை செய்கையில், லீலம்மா கொலை செய்யப்பட்டு பிணமாக இருந்துள்ளார். லீலம்மாவின் சடலத்திற்கு அருகே இருந்த கடிதத்தில், "நோய்கொடுமை மற்றும் தனிமை காரணமாக மனைவியை கொலை செய்து, நான் தற்கொலை செய்துகொள்கிறேன்" என ஜோசப் தெரிவித்துள்ளார்.

லீலம்மாவின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர், உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தம்பதிகளின் மகன், மகள்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement