சந்திரயான்-3 லேண்டரை கண்காணிக்கும் சந்திரயான்-2 ஆர்பிட்டர்: இஸ்ரோ பெருமிதம்..!!ISRO has released a photograph of Chandrayaan-2 orbiter Vikram Lander.

சந்திரயான்-2 ஆர்பிட்டர் விக்ரம் லேண்டரை எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சந்திரயான்-3 விண்கலம் நிலவினை ஆய்வு செய்ய கடந்த மாதம் 14 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில் கடந்த 23ஆம் தேதி மாலை திட்டமிட்டபடி 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் நிலவில் கால் பதித்த 4வது நாடாகவும், தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடாகவும் இந்தியா சாதனை புரிந்தது.

இதனை தொடர்ந்து விக்ரம் லேண்டரில் இருந்து இறங்கிய பிரக்யான் ரோவர் ஊர்தி நிலவில் தனது ஆய்வை தொடங்கியது. முதலில் நிலவின் தரைப் பகுதியில் 8 செ.மீ ஆளவிற்கு துளையிட்ட ரோவர், நிலவின் தட்ப வெப்பநிலை குறித்த அதிர்ச்சிகரமான உண்மையை உலகிற்கு அறிவித்தது.

இதனை தொடர்ந்து, நிலவில் கந்தகம் இருப்பதை உறுதி செய்த பிரக்யான் ரோவர், இரும்பு மற்றும் அலுமினியம் உள்ளிட்ட கனிமங்களும் பிராண வாயு எனப்படும் ஆக்ஸிஜன் இருப்பதையும் உறுதி செய்தது. மேலும் சூரிய ஓளியால் நிலவின் தரை பரப்பில் பிளாஸ்மா உருவாவதையும் உறுதிப்படுத்தியது.

இந்த நிலையில், கடந்த 3 ஆம் தேதி நிலவின் பகல் பொழுது (14 நாட்கள்) நிறைவடந்ததால் ரோவர் தூக்க நிலைக்கு சென்றிருப்பதாக இஸ்ரோ அறிவித்தது. இதற்கிடையே கடந்த 6 ஆம் தேதி சந்திரயான்-2 ஆர்பிட்டர் விக்ரம் லேண்டரை கண்காணித்து எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

இது குறித்து இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

செப்டம்பர் 6, 2023 அன்று சந்திரயான்-2 ஆர்பிட்டரில் இரட்டை அதிர்வெண் செயற்கை துளை ரேடார் (DFSAR) கருவியால் எடுக்கப்பட்ட சந்திரயான்-3 லேண்டரின் படம் இங்கே உள்ளது. இவ்வாறு இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.