பள்ளத்தை பார்த்து பாதையை மாற்றிய ரோவர்: இஸ்ரோ விஞ்ஞானிகள் பெருமிதம்..!!isro-has-announced-that-the-pragyan-rover-which-is-carr

நிலவில் ஆய்வு பணி மேற்கொண்டு வரும் பிரக்யான் ரோவர் தனக்கு முன்னால் பள்ளம் இருப்பதை உணர்ந்து பாதையை மாற்றியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சந்திரயான்-3 விண்கலம் நிலவினை ஆய்வு செய்ய கடந்த மாதம் 14 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில் கடந்த 23ஆம் தேதி மாலை திட்டமிட்டபடி 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் நிலவில் கால் பதித்த 4வது நாடாகவும், தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடாகவும் இந்தியா சாதனை புரிந்தது.

இதனை தொடர்ந்து விக்ரம் லேண்டரில் இருந்து இறங்கிய பிரக்யான் ரோவர் ஊர்தி நிலவில் தனது ஆய்வை தொடங்கியது.  இந்த மிகப்பெரிய சாதனையை புரிந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு உலக அளவில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. முன்னதாக ரஷ்யா நிலவின் தென் துருவத்தை நோக்கி அனுப்பிய லூனா-25 விண்கலம் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

பிரக்யான் ரோவர் நேற்று நிலவின் தென் துருவத்தில் நிலவும் வெப்ப நிலை குரித்து ஆய்வு செய்து தகவல் அனுப்பிய நிலையில், தனக்கு முன்னால் உள்ள பள்ளத்தை உணர்ந்து பாதையை மாற்றியதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 5 மீட்டர் தொலைவில் உள்ளவற்றை உணரும் செயற்கை நுண்ணறிவூட்டப்பட்ட பிரக்யான் ரோவர் 3 மீட்டர் தொலைவில் உள்ள பள்ளத்தை உணர்ந்து பாதையை மாற்றியுள்ளது தங்களுக்கு பெருமிதம் அளிப்பதாக இஸ்ரோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.