கொரோனா தடுப்பூசி போட்டவர்களை குறி வைத்து தாக்குகிறதா மாரடைப்பு...?!!!

கொரோனா தடுப்பூசி போட்டவர்களை குறி வைத்து தாக்குகிறதா மாரடைப்பு...?!!!


Is heart attack targeting those who have been vaccinated against Corona...

இந்தியாவில் சமீப காலங்களில் திடீர் மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளது. முன்பு முதியவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு ஏற்படும் என்று இருந்த நிலையில், இப்போது இளைஞர்கள் மத்தியிலும் மாரடைப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

ஆரோக்கமுடன் இருக்கும் இளைஞர்களுக்கும் தற்போது அதிக அளவில் மாரடைப்பு ஏற்பட்டு, உயிரிழக்கின்றனர். இதற்கிடையே மாரடைப்பு அதிகரிக்க கொரோனா தடுப்பூசியே காரணம் என்ற தகவல்கள் அதிக அளவில் பரவி வருகிறது.

இந்தியாவில் ஏற்படும் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையில் 28.1 சதவீதம் பேர் மாரடைப்பால் மரணமடைவதாக ராஜ்யசபாவில் சுகாதாரத்துறை அமைச்சகம் சமீபத்தில் தெரிவித்துள்ளது. அதாவது, ஐ.சி.எம்.ஆர் ஆய்வு அறிக்கையின்படி, 1990ல் மாரடைப்பால் ஏற்பட்ட இறப்பு 15.2 சதவீதமாக இருந்த நிலையில் 2023 - ல் 28.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

2017-18 ல் எடுக்கப்பட்ட ஆய்வுகளின் படி, தினசரி புகை பிடிப்பவர்களில் 32.8 சதவீதம் பேருக்கும், மதுப் பழக்கம் இருப்பவர்களில் 15.9 சதவீதம் பேருக்கும், உடல் உழைப்பு போதுமான அளவு இல்லாத 41.3 சதவீதம் பேருக்கும் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது 30 முதல் 60 வயதுடையவர்கள் மாரடைப்பால் உயிரிழப்பது கணிசமாக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மாரடைப்பு அதிகரிக்க கொரோனா தடுப்பூசியே காரணம் என்ற தகவல்கள் பரவிய நிலையில், இது தொடர்பாக ஜனதா தளம் கட்சி எம்.பி., ராஜூ ரஞ்சன் சிங் இது குறித்து லோக்சபாவில் கேள்வி எழுப்பினார். 

இதற்கு சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், திடீர் மாரடைப்பு ஏற்பட கொரோனா தடுப்பூசி காரணம் என்பதற்கு எந்தவொரு அறிவியல்பூர்வ ஆதாரமும் இல்லை. கொரோனா காலத்திற்கு பிறகு அதிகளவு மாரடைப்பு ஏற்படுவது குறித்த தரவுகள் எதுவும் இல்லை. அது குறித்த எந்தவொரு ஆய்வுகளையும் ஐ.சி.எம்.ஆர் மேற்கொள்ளவில்லை என கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று 2020-ல் பரவிய நிலையில், 2021 ஆம் வருடம் ஜனவரி முதல் வாரத்தில் இந்தியாவில் கொரோனா வேக்சின் போடும் பணி தொடங்கப்பட்டது. முதலில் சுகாதார ஊழியர்கள். முன்களப் பணியாளர்களுக்கு மட்டும் கொரோனா வேக்சின் செலுத்தப்பட்டது. 

அதன் பின்னர் முதியவர்கள், இணை நோயாளிகள் என்று படிப்படியாக வேக்சின் திட்டம் செயல் படுத்தப்பட்டது. கோவாக்சின், கோவிஷீல்ட், ஸ்புட்னிக் வி, மாடர்னா, ஜான்சன் போன்ற பல வேக்சின்களுக்கு அனுமதி தரப்பட்ட போதிலும் பெரும்பாலும் கோவாக்சின், கோவிஷீல்ட் மூலமே வேக்சின் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.