
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில், இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்போது கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வருகிறது.
ஆரம்பகாலத்தில் இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா பரவல் அதிகப்படியாக இருந்தது. சமீப காலமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்துவந்த நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக நாளொன்றுக்கு கொரோனா பரவல் 3 ஆயிரத்தை தாண்டி வருகிறது.
பொதுமக்கள் நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாதது தான் மீண்டும் கொரோனா உயர்வுக்கு காரணமாக உள்ளது என கூறப்படுகிறது. இந்தநிலையில் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நேற்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின்போது, கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவதில் மக்கள் காட்டும் அலட்சியம் கவலையளிக்கிறது என முதலமைச்சர் தெரிவித்தார்.
பொதுமக்கள் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமுக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இவற்றை செய்யாவிட்டால் மாநிலத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய நிலைமை வரும் என மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
Advertisement
Advertisement