கபடி விளையாடிய கல்லூரி மாணவி சுருண்டு விழுந்து உயிரிழப்பு; பெங்களூருவில் அதிர்ச்சி சம்பவம்...!



College student collapses and dies while playing kabaddi; Shocking incident in Bengaluru...

கபடி விளையாடியபோது கல்லூரி மாணவி மாரடைப்பால் உயிரிழந்த பரிதாப சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. 

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா அத்திபெலே பகுதியில் இருக்கும் செயின்ட் பிலோமினா கல்லூரியில் பி.யூ.சி. முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவி கார்வாரை சேர்ந்த சங்கீதா(17). இவர் ஆனேக்கல் அருகே உள்ள பாலகாரனஹள்ளியில் தங்கி இருந்தார். 

இந்நிலையில் கல்லூரியில் நேற்று விளையாட்டு விழா நடந்தது. இதில் சங்கீதா, கபடி போட்டியில் கலந்து கொண்டார். இந்நிலையில், சங்கீதா தங்கள் அணிக்காக "ரைடு" சென்றார். 

அப்போது சங்கீதாவை எதிரணியினர் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். அப்போது சங்கீதா திடீரென்று சுருண்டு விழுந்தார். இதனால் சக மாணவிகள், அதிர்ச்சி அடைந்தனர். பின்னா் பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் மயங்கி கிடந்த சங்கீதாவை அங்கிருக்கும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அப்போது சங்கீதாவை பரிசோதித்த மருத்துவர்,  சங்கீதா ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக கூறினர். இதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். சங்கீதாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அத்திபெலே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கர்நாடகத்தில் சமீப காலமாக மாரடைப்பால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஏற்பட்டு வந்த மாரடைப்பு தற்போது சிறு வயதினருக்கும் வருகிறது.
இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இந்நிலையில் மன அழுத்தத்திலிருந்து விடுபட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.