மீண்டும் ஒரு சுஜித்! 120 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவனை மீட்கும் பணி தீவிரம்!

மீண்டும் ஒரு சுஜித்! 120 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவனை மீட்கும் பணி தீவிரம்!



child fall in borewell

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் பதஞ்சேரு பகுதியில் வசித்து வரும் கோவர்தன் என்பவரின் 3 வயது குழந்தை சாய் வர்தன், விவசாய நிலத்தில் தனது தந்தை மற்றும் தாத்தாவுடன் மாலை 5 மணிக்கு நடந்து சென்றுள்ளான். கோவர்தனின் தந்தை அவரது விவசாய நிலத்தில் கடந்த வாரம் 3 ஆழ்துளை கிணறுகளை தோண்டியுள்ளார். ஆனால் அதில் தண்ணீர் கிடைக்காததால் நேற்று அதனை மூடிவிட முடிவெடுத்து மாலை அதற்கான பணிகளை செய்துகொண்டிருந்துள்ளார். 

அப்போது, அந்தப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த கோவர்தனின் 3 வயது மகன், 120 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் மாலை 5 மணிக்கு தவறி விழுந்துள்ளான்.

இதனிப்பார்த்து பதறிப்போன குடும்பத்தினர் காவல்துறையினருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் சிறுவனை மீட்கும் முயற்சியை மேற்கொண்டனர்.

சிறுவனை மீட்க நேற்று இரவு நேரம் ஆகிவிட்டதால் விளக்குகள் பொறுத்தப்பட்டு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குழிக்குள் சிறுவனுக்கு மூச்சு திணறல் ஏற்படாமலிருக்க ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு இதே போல திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் சிக்கி 60 மணி நேரம் மீட்புப் பணிகள் பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாட்டு மக்கள் பலரையும் கண்ணீர் சிந்த வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், சாய் வர்தனை மீட்க தீவிரமாக போராடி வருகின்றனர்.