இந்தியா Covid-19

அதே தவறை மீண்டும் செய்யவேண்டாம்.! வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவரையும் தனிமைப்படுத்த வேண்டும்.! உயர்நீதிமன்றத்தில் வழக்கு.!

Summary:

வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளையும் தனிமைப்படுத்துவதை கட்டாயமாக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்போது கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது இங்கிலாந்து நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. 

இந்நிலையில் பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களை அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதனையடுத்து உருமாற்றம் பெற்ற கொரோனா பரவும் சூழ்நிலையில் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மிக வேகமாகவும், எளிதாகவும் பரவும் இந்த வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்கள் நாளை வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் கொரோனா பரவல் தொடங்கிய காலத்தில், அதாவது, கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு மட்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதனால், பிற நாடுகளில் இருந்து வந்த பயணிகள் மூலமும் கொரோனா பரவியது. எனவே, உருமாற்றம் பெற்று வரும் கொரோனாவை கட்டுபடுத்த இங்கிலாந்து மட்டுமல்லாமல் அனைத்து வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும். 

எனவே வெளிநாடுகளில் இருந்து, விமானம், கப்பல் மூலம் வரும் அனைத்து பயணிகளை கண்டிப்பாக 14 நாட்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்த வேண்டும் என துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துாரைச் சேர்ந்த, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement