தறிகெட்டு இயங்கிய குப்பை லாரி.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பள்ளி மாணவி பரிதாப பலி.. 2 பேர் உயிர் ஊசல்..!Bangalore Hebbal 9 th Class Girl Student Akshara Died Accident BBMP Lorry

சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழைநீரை அகற்றாத அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால், சாலை வழியே சாலையைக்கடந்த பள்ளி மாணவி குப்பை லாரி மோதி பலியாகினர். 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் ஹெப்பால் பகுதியில் வசித்து வருபவர் நரசிம்மமூர்த்தி. இவரின் மகள் அக்சயா (வயது 14). சிறுமி தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இதே பள்ளியில், நரசிம்மமூர்த்தியின் இரண்டாவது மகள் சந்தியா 7 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். நேற்று பள்ளியில் தேர்வு நடைபெற்ற நிலையில், தேர்வை எழுத சகோதரிகள் இருவரும் பள்ளிக்கு பேருந்தில் சென்றுள்ளனர். 

தேர்வு முடிந்ததும் மதியம் 1 மணியளவில் அரசு பேருந்தில் சகோதரிகள் ஹெப்பாலுக்கு வருகை தந்துள்ளனர். ஹெப்பால் பேருந்து நிலையம் அருகேயுள்ள மேம்பாலத்தை சாலை வழியே சகோதரிகள் கடந்துள்ளனர். பொதுமக்களும் அவ்வழியே சாலையை கடந்துள்ளனர். அப்போது, சாலையில் வந்த பெங்களூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை லாரி, பாதசாரிகள் - கார் - இருசக்கர வாகனம் என சங்கிலித்தொடர் விபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

bangalore

இந்த விபத்தில், லாரி மோதிய வேகத்தில் சிறுமி அக்சயா மற்றும் சௌமியா (வயது 28) தூக்கி வீசப்பட்டன. இருசக்கர வாகனத்தில் சென்ற விகாஷ் (வயது 40) என்பவரும் படுகாயமடைந்தார். இவர்கள் மூவரையும் மீட்ட பொதுமக்கள், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு சென்ற சில நொடியிலேயே சிறுமி அக்சயா பரிதாபமாக உயிரிழந்தார். சௌமியா மற்றும் விகாஷ் ஆகியோர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார்கள்.

விபத்து தொடர்பாக தகவல் அறிந்த ஹெப்பால் நகர காவல் துறையினர் அக்சயாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, லாரி ஓட்டுநர் மஞ்சுநாத் என்பவரை கைது செய்தனர். சாலையை கடக்க சுரங்கப்பாதை உள்ள நிலையில், 2 நாட்களுக்கு முன்னர் பெய்த மழையின் காரணமாக அதில் நீர் இருந்துள்ளது. மாநகராட்சி சார்பில் அது அகற்றப்படவில்லை.

இதனால் பொதுமக்கள் சாலையை ஆபத்தான முறையில் கடந்து சென்ற நிலையில், விபத்து ஏற்பட்டு மாணவியின் உயிர் பறிபோயுள்ளது. விபத்திற்கு பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழைநீரை அகற்றியுள்ளனர்.