இனி முக கவசம் அணியாவிட்டால் ரூ.2000 அபராதம்.! டெல்லி முதல்வர் அதிரடி அறிவிப்பு.!

இனி முக கவசம் அணியாவிட்டால் ரூ.2000 அபராதம்.! டெல்லி முதல்வர் அதிரடி அறிவிப்பு.!


2000 fined for not wear face mask

டெல்லியில் முதலில் கொரோனா பாதிப்பு குறைந்த அளவிலே இருந்தது. ஆனால் தற்போது கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று பெரும் பாதிப்புக்கு உள்ளான மாநிலங்களில் டெல்லி முதல் இடத்தில் இருந்துவந்தது. தற்போது அங்கு கொரோனா பரவல் இரண்டாம் அலை ஏற்பட்டிருக்கிறது என்ற தகவலும் வெளியானது.

டெல்லியில் நேற்று ஒரே நாளில் 7,486 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,03,084 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் மாநிலத்தில் 131 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் கொரோனா தொற்று உச்சத்தில் உள்ளதால், டெல்லியில் மீண்டும் முழு ஊரடங்கு என்ற தகவல் பரவத் தொடங்கியது.

corona

ஆனால் டெல்லியில் மீண்டும்  ஊரடங்கை  அமல்படுத்தும் நோக்கம் அரசுக்கு இல்லை. கொரோனாவை கட்டுப்படுத்த சிறந்த மருத்துவமனை மேலாண்மை மற்றும் சிறந்த மருத்துவ வசதிகளே தீர்வுகளாக இருக்க முடியும் என டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் கெஜ்ரிவால், அரசியல் செய்வதற்கான நேரம் இது அல்ல என்றும், இது மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய நேரம் என்றும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

மேலும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்த முக கவசம் அணிய வேண்டியது கட்டாயம் என்று கெஜ்ரிவால் வலியுறுத்தினார். பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு தற்போது ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில், இனி முக கவசம் அணியாவிட்டால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.