பெட்ரோல், டீசல் விலை உயர்வு - வாகனங்களை மாட்டுவண்டியில் ஏற்றி நூதன போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு - வாகனங்களை மாட்டுவண்டியில் ஏற்றி நூதன போராட்டம்



petrol diesel hike lifted vehicles in bull cart

கடந்த 2 வாரங்களில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.72 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.31 காசுகளும் உயந்துள்ளது. இவ்வாறு அடிக்கடி உயர்த்தப்படும் பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் வாகனங்களை இயக்க முடியவில்லை என்று கோவில்பட்டியில் ஆட்டோ, வேன் ஓட்டுநர்கள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய, மாநில அரசுகளின் உற்பத்தி வரி மற்றும் வாட் வரி காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது. இந்த வரி விதிப்புகளைக் குறைப்பதுடன், ஜி.எஸ்.டி வரி விதிப்பின் கீழ் கொண்டுவந்து விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு ஆட்டோ, வேன் மற்றும் கார் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

petrol diesel price

இதுகுறித்து ஓட்டுநர்கள் கூறுகையில்,“மத்திய அரசு கடந்த 2 வாரங்களில் மட்டும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.1.72 காசுகளும், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2.31 காசுகள் வரையும் உயர்த்தியுள்ளது. இவ்வாறு அடிக்கடி உயர்த்தப்படும் பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் வாகனங்களை இயக்க முடியவில்லை.

இதனால் வாகனங்களின் வாடகையை உயர்த்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வாடகை உயரும்போது, வாகன புக்கிங் ஆர்டர்கள் குறையும். இதனால், ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்படும். அத்துடன், பால், காய்கறி, மளிகைப் பொருள்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்படும். ஏற்கெனவே டோல்கேட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது மூன்றாம் நபர் இன்ஷூரன்ஸ் கட்டணமும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

petrol diesel price

எனவே, மத்திய மாநில அரசுகள் உடனடியாக பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே நிலை நீடித்தால் ஆட்டோ, வேன், கார் ஆகியவற்றை ஓட்டுநர்கள் இயக்க முடியாது. இருசக்கர வாகனங்களைக்கூட இயக்க முடியாமல் மீண்டும் சைக்கிள் ஓட்டிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்படலாம். இதை உணர்த்தும் விதமாகத்தான், மாட்டுவண்டியில் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தை ஏற்றி, எங்களின் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளோம்” என்றனர்.