என்னை ஓடவைத்த இடம்...நெஞ்சில் வலியுடன் திரும்பினேன்! மிகுந்த வருத்தத்துடன் இயக்குனர் மிஷ்கின் வெளியிட்ட உருக்கமான பதிவு!

என்னை ஓடவைத்த இடம்...நெஞ்சில் வலியுடன் திரும்பினேன்! மிகுந்த வருத்தத்துடன் இயக்குனர் மிஷ்கின் வெளியிட்ட உருக்கமான பதிவு!



miskin emotional  tweet about one theatre in dinduga

தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் மிஷ்கின். இவர் தற்போது பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில் மிஷ்கின் தனது சமூக வலைதளபக்கத்தில்,தான் சிறுவயதில் படம் பார்த்த பழைய தியேட்டர் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், எனது ஐந்தாவது வயதில் என்னுடைய தந்தை என்னை திண்டுக்கல்லில் உள்ள என்.வி.ஜி.பி தியேட்டருக்கு அழைத்து சென்று புரூஸ்லி நடித்த எண்டர் தி டிராகன் படத்தை பார்த்தேன். அதுதான் என்னுடைய முதல் திரைப்படம். சிறுவனாக பல திரைப்படங்களை நான் இந்த என்.வி.ஜி.பி தியேட்டரில் பார்த்து ரசித்திருக்கிறேன்.இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள இடங்களில் எனது அடுத்த படத்திற்காக லொகேஷன் பார்க்க சென்றேன்.

Miskin

அப்பொழுது அந்த தியேட்டரை பார்க்க சென்றேன்.என் வாழ்க்கையையே ஓடவைத்த தியேட்டர். உரிமையாளர் அனுமதி பெற்று ஐந்து வயதுச் சிறுவனாக உள்ளே சென்று பார்த்தேன். அந்த தியேட்டருக்குள் நான் சிறுவயதில் பார்த்த தூண்கள் அப்படியே இருந்தது.என் உதவி இயக்குநர் போட்டோ எடுத்தார். மேலும் நான் ஏன் தியேட்டரில்  படம் ஓடலை என உரிமையாளரிடம் கேட்டேன். அதற்கு அவர் காலம் மாறிடுச்சு. டிவி, நெட், பைரசின்னு எல்லாம் வந்துருச்சு. தியேட்டரை நம்பி முதலீடு போட முடியல. அதனாலதான் தியேட்டரில் படம் எதுவும் ஓடுறத நிப்பாட்டிட்டோம்.

மேலும் அடுத்தவாரம் இந்த தியேட்டரை இடிக்கப் போறோம் என்று சொன்னார். அதை கேட்டதும் நெஞ்சில் வலியுடன் காரில் ஏறி திரும்பி சென்றேன். ஆனால் அந்த தியேட்டரின் வாசலில் அண்ணாந்து பார்த்தவாறு ஒரு ஐந்து வயது சிறுவன் இன்னும் அங்கேயே நின்று கொண்டிருக்கின்றான் என இயக்குநர் மிஷ்கின் உருக்கமாக தெரிவித்துள்ளார்.