சினிமா

நாலு வருஷமா இழுத்துக்கிட்டிருந்த கேஸ்.. மனுஷன் ஒத்த வார்த்தையில் முடிச்சு வச்சுட்டாரு..!!

Summary:

அவன் இவன் படம் மூலம் ஏற்பட்ட 4 வருட பிரச்னையை நடிகர் ஆர்யா ஒரே வார்த்தையில் முடித்துவைத்தா

அவன் இவன் படம் மூலம் ஏற்பட்ட 4 வருட பிரச்னையை நடிகர் ஆர்யா ஒரே வார்த்தையில் முடித்துவைத்தார்.

இயக்குனர் பாலா இயக்கத்தில், விஷால் - ஆர்யா நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அவன் இவன். வித்தியாசமான கதைக்களம் கொண்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியும் பெற்றது. ஆனால் இந்த படத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற சொரிமுத்து அய்யனார் கோயில் மற்றும் சிங்கம்பட்டி ஜமீன் குறித்து அவதூறாக சித்திரித்து சில காட்சிகள் இடம் பெற்றிருந்ததாக கூறி புகார் எழுந்தது.

இதனை அடுத்து சிங்கம்பட்டி ஜமீன் டி.என்.எஸ்.தீர்த்தபதி மகன் சங்கராத்மஜன் அவர்கள் அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தவறான காட்சியை படமாகியதற்காகவும், அந்த காட்சியில் நடித்ததற்காவும் படத்தின் இயக்குனர் பாலா மற்றும் நடிகர் ஆர்யா இருவருக்கும் கடந்த 2018 இல் தனித்தனி வழக்காக பிரிக்கப்பட்டு நடந்துவந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இரண்டுமுறை நீதிமன்றத்தில் ஆஜரான நடிகர் ஆர்யா அதன்பின்னர் ஆஜராகவில்லை. இதனால் நடிகர் ஆர்யாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் ஆர்யா திங்கள்கிழமை காலை அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு ஆஜரானார்.

இந்த வழக்கு விசாரணை மதியம் 2 மணிக்குஒத்திவைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் 2 மணிக்கு விசாரணை தொடங்கியது. விசாரணையின்போது, அந்த காட்சியில் நடித்ததற்கு வருத்தம் தெரிவித்த ஆர்யா,மனுதாரர் சங்கராத்மஜனிடம் மன்னிப்பும் கேட்டார். இதனை மானுதாரரும் ஏற்றுக்கொண்டதை அடுத்து வழக்கை முடித்து வைத்து, ஆர்யாவை விடுவித்து உத்தரவிட்டார் நீதிபதி.

பின்னர் இந்த வழக்கு குறித்து பேசிய நடிகர் ஆர்யா, "அந்த காட்சிகள் யாவும் யார் மனதையும் புண்படும் நோக்கில் எடுக்கப்பட்டது இல்லை. ஆனால் சிங்கம்பட்டி ஜமீனின் வாரிசு சங்கராத்மஜன் மனம் புண்பட்டு இருப்பதாக கூறுவது வருத்தமளிக்கிறது.

இதுவரை அவரை நேரில் சந்திக்க இயலவில்லை, தற்போது அவரை நேரில் சந்தித்தநிலையில், அந்த காட்சியில் நடித்தற்காக வருத்தம் தெரிவித்தேன். அவரும் அதை ஏற்றுக்கொண்டார். இதனால் இந்த வழக்கு முடிக்கப்பட்டது என்றார்".

நான்கு வருடங்களாக இழுத்துக்கொண்டிருந்த வழக்கை ஒரு மன்னிப்பு மூலம் முடித்துவைத்துள்ளார் நடிகர் ஆர்யா.


Advertisement