"திருமண விஷயத்தில் தப்பான முடிவு எடுத்துவிட்டோமோ என்று நினைத்தேன்" திருமணம் குறித்து மனம் திறந்த சங்கீதா..

1997ம் ஆண்டு "கங்கோத்ரி" என்ற மலையாள படத்தில் அறிமுகமானவர் சங்கீதா. இவர் தமிழில் 1998ஆம் ஆண்டு வெளியான "காதலே நிம்மதி" திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து உதவிக்கு வரலாமா, பகவத் சிங், விருந்தினர் மாளிகை, அன்புள்ள காதலுக்கு என பல படங்களில் நடித்துள்ளார்.
ஆனால் இவருக்கு தமிழில் பெயர் பெற்றுத் தந்தது பாலா இயக்கத்தில் வெளியான "பிதாமகன்" திரைப்படம் தான். அந்தப் படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. கன்னடம் மற்றும் மலையாளத் திரைப்படங்களிலும் நடித்து வரும் இவர், பாடகர் கிரிஷை திருமணம் செய்துகொண்டார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட சங்கீதா, தனது திருமண வாழ்க்கை குறித்து பேசினார். அவர் பேசியதாவது, "எனக்கு கிரிஷை பிடித்திருந்தது. நான் தான் முதலில் காதலை சொன்னேன். 3 மாதங்கள் டேட்டிங் செய்து, 4வது மாதத்தில் எங்களுக்குள்ளேயே மோதிரம் மாற்றிக்கொண்டோம்.
இறுதியாக திருமணம் நடந்தது. ஆனால் முதல் இரண்டு ஆண்டுகள் நரக வாழ்க்கையாக இருந்தது. தவறு செய்துவிட்டோமோ என்று கூட நினைத்தேன். ஆனால் எங்களை யாரையும் வரவிடாமல் புரிந்துகொண்டோம்" என்று சங்கீதா கூறியுள்ளார்.