இயக்குனர் வெற்றிமாறனின் படப்பிடிப்பில் விபத்து!.. சண்டை பயிற்சியாளர் பரிதாப பலி..!

இயக்குனர் வெற்றிமாறனின் படப்பிடிப்பில் விபத்து!.. சண்டை பயிற்சியாளர் பரிதாப பலி..!



Accident on the set of director Vetermaran

பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் பொல்லாதவன், வடசென்னை, அசுரன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். இவர் தற்போது நகைச்சுவை நடிகர் சூரியை கதையின் நாயகனாக முன்னிருத்தி  'விடுதலை' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு வண்டலூர் அருகேயுள்ள ஊனமாஞ்சேரி கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் செட் அமைத்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நேற்று ரயில் மீது சண்டை நடப்பது போன்ற காட்சிக்கான படப்பிடிப்பு செய்யப்பட்டது. அப்போது ரயில் மீது சண்டையிடுவது போன்று நடித்துக் கொண்டிருந்த சண்டை பயிற்சியாளர் சுரேஷ், என்பவர் திடீரென இரும்பு கயிறு அறுந்ததில் ரயில் பெட்டியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சுரேஷை, மீட்ட படப்பிடிப்பு குழுவினர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே சுரேஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த ஓட்டேரி காவல்துறையினர், சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஓட்டேரி காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலம் தலைமையிலான காவல்துறையினர், படப்பிடிப்பு நடைபெற்ற ஊனமாஞ்சேரி கிராமத்திற்கு சென்று சண்டைக் காட்சி படமாக்கப்பட்ட பகுதியை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.