திக் திக் நிமிடம்.... மின்தடையால் 245 அடி உயரத்தில் நின்ற போன ரோலர் கோஸ்டர்! பயத்தில் பரிதவித்த பயணிகள்....அதிர்ச்சி வீடியோ..!!!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள சிக்ஸ் ஃபிளாக்ஸ் பூங்காவில் மின்தடை காரணமாக 245 அடி உயரத்தில் ரோலர் கோஸ்டர் நின்றதால் பயணிகள் பரபரப்பில் சிக்கினர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ‘சிக்ஸ் ஃபிளாக்ஸ்’ பொழுதுபோக்கு பூங்காவில் ஏற்பட்ட திடீர் மின்தடை காரணமாக, 245 அடி உயரத்தில் சென்றுகொண்டிருந்த ரோலர் கோஸ்டர் பாதியிலேயே நின்றது. இதில் பயணம் செய்தவர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மேலேயே சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவசர மீட்பு நடவடிக்கைகள் மூலம் அனைவரும் பாதுகாப்பாக கீழே அழைத்து வரப்பட்டனர்.
கட்டுமான பணியின் போது மின் இணைப்பு துண்டிப்பு
தகவலின்படி, பூங்கா வளாகத்தில் நடைபெற்ற கட்டுமானப் பணிகளின் போது பூமிக்கடியில் இருந்த மின் இணைப்பு தவறுதலாக சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் முழு பகுதியிலும் மின்தடை ஏற்பட்டது. அந்த நேரத்தில் இயங்கிக்கொண்டிருந்த ரோலர் கோஸ்டர் திடீரென நின்றதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
உச்சிப் பகுதியில் நின்றுகொண்டிருந்த ரைடில் குழந்தைகள் உள்ளிட்ட பலர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் திரும்ப வராததால், பயணிகளை அவசர முறையில் வெளியேற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதையும் படிங்க: சாகச அனுபவ ஸ்கை டைனிங்! 150 அடி உயரத்தில் நடுவானில் குழந்தை உட்பட 4 பேர் சிக்கித் தவிப்பு.. அதிர்ச்சி வீடியோ!
குறுகிய படிக்கட்டுகள் வழியாக மீட்பு
இதையடுத்து, பூங்கா ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு குழுவினர் இணைந்து பயணிகளின் பாதுகாப்பு வளையங்களை அகற்றி, அவசரகால பயன்பாட்டுக்கான குறுகிய இரும்பு படிக்கட்டுகள் வழியாக ஒருவருக்கொருவர் கீழே இறக்கினர். இந்த மீட்பு நடவடிக்கை முழுவதும் பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்டதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், பயணிகள் பயத்துடன் மெதுவாக தண்டவாள ஓரமாக இறங்கி வரும் காட்சிகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, 245 அடி உயரத்தில் நடந்த இந்த மின்தடை சம்பவம் பலரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பயணிகளுக்கு இலவச டிக்கெட் அறிவிப்பு
அதிர்ஷ்டவசமாக, இந்த நிகழ்வில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பூங்கா நிர்வாகம் உறுதி செய்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மீண்டும் இலவசமாக பூங்காவிற்கு வருவதற்கான டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.