கிருஷ்ண ஜெயந்தி உறியடி திருவிழாவில் நடந்த உயிர் சேதம்! 2 பேர் பரிதாப பலி.... 212 பேர் படுகாயம்! நொடியில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மகாராஷ்டிராவில் நடந்த தஹி ஹண்டி விழாவில் விபத்துகள் ஏற்பட்டதில் 2 பேர் உயிரிழந்தனர். 212 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மகாராஷ்டிராவில் நடைபெற்ற தஹி ஹண்டி ( உறியடி)விழாவில் அடுத்தடுத்து விபத்துகள் ஏற்பட்டுள்ளன. மும்பை மால்வானியில் 7 வயது சிறுவனும், புனே பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியில் பெண்ணும் உயிரிழந்தனர். மும்பை மற்றும் சுற்றுவட்டாரத்தில் 168 பேரும், தானேயில் 44 பேரும் காயமடைந்துள்ளனர்.
செங்கல் தூண் இடிந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு
நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்கள் நடைபெற்ற நிலையில், மகாராஷ்டிராவில் தஹி ஹண்டி விழா வழக்கமான உற்சாகத்துடன் நடந்தது. ‘கோவிந்தாக்கள்’ என அழைக்கப்படும் இளைஞர்கள் பல அடுக்குகளாக மனித பிரமிடுகளை அமைத்து, உயரத்தில் கட்டப்பட்டிருந்த தயிர்ப் பானையை உடைத்து தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
இதற்கிடையே மும்பை மால்வானி பகுதியில் எதிர்பாராத விபத்து ஏற்பட்டது. உறியடி பானையை கட்டி வைத்திருந்த செங்கல் தூண் திடீரென சரிந்து விழுந்ததில், அங்கு இருந்த ருத்ரா கதம் என்ற 7 வயது சிறுவன் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
ஒலிபெருக்கி சட்டம் சரிந்து பெண் பலி
புனே பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியிலும் விழா நேரத்தில் சோகம் ஏற்பட்டது. ஒலிபெருக்கி அமைக்கப்பட்டிருந்த இரும்புச்சட்டம் திடீரென சரிந்து விழுந்ததில் சல்மா என்ற பெண் உயிரிழந்தார். இதனால் விழா ஏற்பாடுகளின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
இதுதவிர, மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்த பல்வேறு சம்பவங்களில் 168 பேர் காயமடைந்தனர். தானே நகரில் மட்டும் 44 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதுகாப்புக்குத்தான் முதல் முக்கியத்துவம்
தொடர் விபத்துகளை தொடர்ந்து விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். மனித பிரமிடுகளை அமைத்து சாதனை படைப்பதைவிட, கோவிந்தாக்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கே முதலிடம் கொடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். விழா கொண்டாட்டங்களில் பாதுகாப்பு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.