லேப்டாப், கம்ப்யூட்டரில் வைரஸ் தாக்குதலா? சரிசெய்வது எப்படி?
சிஸ்டம் கிராஷ், பாப்-அப் மெசேஜ்கள், தேவையில்லாத ஃபோல்டர்கள் வைரஸ் தாக்குதலை சுட்டிக்காட்டும் முக்கிய அறிகுறிகள் ஆகும்.
லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதா? அதை எப்படி கண்டறிந்து சரிசெய்வது? பாப்-அப் மெசேஜ்கள், சிஸ்டம் கிராஷ் உள்ளிட்ட முக்கிய அறிகுறிகள் மற்றும் தீர்வுகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
தெரிந்துகொள்வது அவசியம்:
தற்போதைய காலக்கட்டத்தில் பலரும் தங்களது அலுவலக பணிகள் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்காக லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இவை பல வேலைகளை எளிதாகச் செய்ய உதவினாலும், சில நேரங்களில் வைரஸ் தாக்குதல் போன்ற சிக்கல்களையும் ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதா? என்பதை எப்படி கண்டறிவது மற்றும் அதை எவ்வாறு சரிசெய்வது என்பது குறித்து அறிந்திருப்பது முக்கியமாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க: லேப்டாப் தீப்பிடித்து வெடிக்கும் அபாயம்.. இந்த தவறை செய்யாதீங்க.. எச்சரிக்கும் நிபுணர்கள்.!
சின்னச்சின்ன அறிகுறிகள்:
பொதுவாக, உங்கள் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் நீங்கள் உருவாக்காத புதிய கணக்கு தானாக சைன்-இன் ஆகி பின்னர் சைன்-அவுட் ஆகும் நிலை ஏற்பட்டால் அது வைரஸ் தாக்குதலின் அறிகுறியாக இருக்கலாம். அதேபோல், ஸ்மார்ட்போனை பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது திடீரென சிஸ்டம் கிராஷ் ஆகுதல் அல்லது செயல்பாடு மந்தமாகிவிடுதல் போன்ற பிரச்சினைகளும் வைரஸ் தாக்குதலை சுட்டிக்காட்டும். இதுபோன்ற சந்தேகங்கள் ஏற்பட்டால் உடனடியாக நம்பகமான ஆன்டிவைரஸ் சாஃப்ட்வேரை பதிவிறக்கம் செய்து முழுமையான ஸ்கேன் மேற்கொள்வது அவசியமாகும்.
இதை கவனிங்க:
மேலும், கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் திடீரென பாப்-அப் மெசேஜ்கள் தொடர்ந்து தோன்ற ஆரம்பித்தால் அது வைரஸ் தாக்குதலின் முக்கிய அறிகுறியாக கருதப்படுகிறது. நீங்கள் சேமித்து வைத்திருக்கும் கோப்புகள் உள்ள ஃபோல்டர்களில் தேவையில்லாத புதிய ஃபோல்டர்கள் அல்லது கோப்புகள் தானாக உருவாகினாலும் கவனம் செலுத்த வேண்டும். இது உங்கள் சாதனம் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி, யாரோ ஒருவர் அதை கட்டுப்படுத்த முயற்சி செய்கிறார் என்பதற்கான சாத்தியத்தை வெளிப்படுத்தும்.
புதிய ஆன்டிவைரஸ்:
அதே நேரத்தில், உங்கள் சாதனத்தில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள ஆன்டிவைரஸ் சாஃப்ட்வேர் எந்த எச்சரிக்கையும் வழங்கவில்லை என்றால், அந்த மென்பொருளை நீக்கி வேறு நம்பகமான பாதுகாப்பு மென்பொருளை நிறுவுவது நல்லது. ஒருவேளை புதிய ஆன்டிவைரஸ் சாஃப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் கூட அது வைரஸ் தாக்குதலின் அறிகுறியாக இருக்கலாம். எனவே மேற்கண்ட எச்சரிக்கை அறிகுறிகளை கவனித்து செயல்பட்டால், கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதா என்பதை எளிதாக கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
இதையும் படிங்க: உஷார்... ஆபத்தில் ஸ்மார்ட் டிவிக்கள்.. தப்பிப்பது எப்படி?