TN Govt Schemes: திருமணமாகாத ஏழை பெண்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம்.. தமிழக அரசின் திட்டம்.!
Tamil Nadu Unmarried Women Pension Scheme: பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஓய்வூதியம் வழங்கும் தமிழக அரசின் திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாடு அரசின் ‘திருமணம் ஆகாத பெண்கள் ஓய்வூதிய உதவித்தொகை திட்டம்’ குறித்த தகுதிகள், ஆவணங்கள், விண்ணப்ப முறை தொடர்பாக இப்பதிவில் பார்க்கலாம்.
தமிழக அரசின் திட்டங்கள்:
How to Apply Unmarried Women Pension Tamil Nadu: இந்தியாவில் பெண்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாடு அரசு பெண்கள் நலனுக்காக புதுமைப் பெண் திட்டம், மகளிர் உரிமைத்தொகை, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், மகளிருக்கான திருமண நிதி உதவி, தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: Govt Schemes: ரூ.10 லட்சம் வரை கடன்.. பெண்களுக்கு ஜாக்பாட்... முழு விபரம் இதோ.!
திருமணம் ஆகாத பெண்கள் ஓய்வூதிய உதவித்தொகை திட்டம்:
இதுவரை முதியோர், விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில், திருமணம் ஆகாமலேயே முதிர் வயதை அடைந்த ஆதரவற்ற ஏழை பெண்களுக்கு தனியான திட்டம் இல்லாத நிலை இருந்தது. இந்த குறையை உணர்ந்து, அத்தகைய பெண்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு 'திருமணம் ஆகாத பெண்கள் ஓய்வூதிய உதவித்தொகை திட்டம்' (UWPS) என்ற புதிய நலத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
விதிமுறைகள் என்ன?
இந்த திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 வயதுக்கு மேற்பட்ட, ஆதரவற்ற மற்றும் வறுமை நிலையில் உள்ள திருமணமாகாத பெண்களுக்கு, தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் மாதந்தோறும் ரூ.1,000 ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர் தமிழ்நாடு குடிமகனாக இருக்க வேண்டும். திருமணம் ஆகாதவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். அரசு ஊழியராகவோ, வருமான வரி செலுத்துபவராகவோ இருக்கக்கூடாது. மேலும், லைவ்-இன் உறவில் உள்ள பெண்கள் அல்லது தமிழக அரசின் பிற நலத்திட்டங்களில் இருந்து பண உதவி பெறுபவர்கள் இத்திட்டத்திற்கு தகுதியற்றவர்கள் ஆவார்கள்.
தேவையான ஆவணங்கள்:
விண்ணப்பதாரரின் பெயரில் உள்ள அசையா சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சத்தை மீறக்கூடாது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க திருமணமாகாதவர் என்பதற்கான சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, வயதுச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, சாதிச் சான்றிதழ், சொத்து மதிப்புச் சான்று, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் சுய அறிவிப்பு பிரமாணப் பத்திரம் (Self-declaration Affidavit) ஆகிய ஆவணங்கள் அவசியமாகும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள், தங்கள் பகுதியில் உள்ள அரசு இ-சேவை மையங்கள் அல்லது அந்தந்த மாவட்ட நகராட்சி அலுவலகம் அல்லது பஞ்சாயத்து அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட 30 முதல் 45 நாட்களுக்குள் பரிசீலனை செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்படும் நிலையில், அடுத்த மாதத்தின் முதல் வாரத்திலிருந்து ஓய்வூதியம் மாதந்தோறும் வங்கி கணக்கில் செலுத்தப்படும். மேலும், விண்ணப்ப நிலை மற்றும் கூடுதல் விவரங்களை அறிய https://www.tnesevai.tn.gov.in என்ற தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.