குழந்தையை உதறிவிட்டு போன கல்நெஞ்சக்காரி அம்மா.... 6 மாதத்தில் இருந்து மகளுக்காக வாழ்க்கை வாழும் அப்பா! உருக வைக்கும் சிங்கிள் ஃபாதரின் போராட்டம்...!!!
சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த அகமது பாஷா, ஆட்டிசம் பாதித்த மகளை தனியாக வளர்த்து வரும் வாழ்க்கைப் போராட்டம் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த தையல் கலைஞர் அகமது பாஷாவின் வாழ்க்கைப் போராட்டம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆட்டிசம் மற்றும் பலதிறன் குறைபாடு கொண்ட மகளை தனியாக வளர்த்து வரும் அவர், தினமும் பல சவால்களை எதிர்கொண்டு வாழ்ந்து வருகிறார்.
சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து காப்பகத்தில் வளர்ந்த அகமது பாஷா, 25 வயதில் திருமணம் செய்து கொண்டார். பின்னர் மகள் பிறந்தது அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், குழந்தைக்கு 6 மாதம் ஆனபோது ஏற்பட்ட உடல்நல மாற்றங்களைத் தொடர்ந்து, மருத்துவர்கள் குழந்தைக்கு ஆட்டிசம் மற்றும் பலதிறன் குறைபாடு இருப்பதை உறுதி செய்தனர்.
இதையும் படிங்க: 30 லிட்டர் தாய்பாலை தானம் செய்த பிரபல நடிகரின் மனைவி! குவியும் பாராட்டுக்கள்...
குழந்தையை விட்டு சென்ற மனைவி
குழந்தையால் எதிர்காலத்தில் நடக்க முடியாமல் போகலாம் என்ற தகவலும், ஆண் குழந்தை பிறக்கவில்லை என்ற மனவருத்தமும் குடும்பத்தில் பிரச்சினையை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, குழந்தைக்கு ஒரு வயதாகும் முன்பே அவரது மனைவி வீட்டை விட்டு பிரிந்துள்ளார்.
பின்னர் நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்று மறுமணமும் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதன்பின், மகளுக்கு அம்மாவாகவும் அப்பாவாகவும் அகமது பாஷாவே இருந்து வருகிறார்.
மகளுக்காக வேலை கூட விட்ட தந்தை
கொரோனா காலத்தில் வருமானம் பாதிக்கப்பட்டதால், மகளுக்குப் பால் மற்றும் டயப்பர் வாங்க அதிகாலை நேரங்களில் பால் விநியோக வேலையிலும் அவர் சென்றுள்ளார். ஆனால் ஒரு நாள் தாமதமாக வீட்டிற்கு வந்தபோது, குழந்தை அதிகமாக அழுததால் அந்த வேலையையும் விட்டுவிட்டு, வீட்டிலேயே தையல் கடை நடத்த தொடங்கியுள்ளார்.
சமையல் செய்வது முதல் மகளுக்கு உணவு ஊட்டுவது, தினசரி தேவைகளில் உதவுவது வரை அனைத்தையும் அவரே கவனித்து வருகிறார். “அப்பா” என்ற ஒரு வார்த்தையை மட்டுமே பேசத் தெரிந்த மகளை ஒரு நிமிடம் கூட தனியாக விட்டு செல்ல முடியாது என அவர் கூறுகிறார்.
மருத்துவ செலவுகளால் தவிப்பு
அரசு வழங்கும் ₹2,000 உதவித்தொகை கூட மகளின் டயப்பர் செலவுக்கு போதவில்லை என்கிறார் அகமது. ஸ்பீச் தெரபி, நடைப் பயிற்சி உள்ளிட்ட சிகிச்சைகளுக்கான செலவுகளை சமாளிக்க முடியாமல் தவித்து வருகிறார்.
மேலும், குழந்தையை நேராக நிற்க வைக்க தேவையான ₹45,000 மதிப்புள்ள பெல்ட்டை வாங்க முடியாததால், துணியால் கட்டி உதவி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“சிங்கிள் மதர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் போல, சிங்கிள் ஃபாதர்-களுக்கும் அரசு ஆதரவு வழங்க வேண்டும். எங்களுக்கு தேவை அனுதாபம் இல்லை, வாழ்க்கையை நடத்த உதவும் ஆதரவு தான்” என்று அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.