சென்னையில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்.. பொதுமக்களுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை!
சென்னையில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்.. பொதுமக்களுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை!
சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் 2,000-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதிப்புக்காக சிகிச்சை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் காய்ச்சல் பாதிப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.
மருத்துவர்களின் தகவலின்படி, தற்போது சென்னையில் பல்வேறு சுவாசத் தொற்று வைரஸ்கள் பரவி வருகின்றன. குறிப்பாக இன்ஃப்ளூயன்சா ஏ, ரைனோ வைரஸ், ஆர்எஸ்வி உள்ளிட்ட வைரஸ் தொற்றுகள் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். சென்னையில் பள்ளிக் குழந்தைகளிடையே இன்ஃப்ளூயன்சா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
காய்ச்சலுடன் சளி, இருமல், தொண்டை வலி, உடல் சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஏற்கெனவே உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: முட்டை விலை மீண்டும் உயர்வு! நாமக்கலில் புதிய கொள்முதல் விலை அறிவிப்பு!
காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் சுயமாக மருந்துகளை எடுத்துக்கொள்வதைத் தவிர்த்து, மருத்துவரின் ஆலோசனையுடன் தேவையான பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம். கைகளை அடிக்கடி கழுவுதல், இருமல் மற்றும் தும்மலின்போது முகத்தை மூடுதல், உடல்நிலை சரியில்லாதபோது பிறருடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்த்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.
இதையும் படிங்க: PET ஆசிரியர் செய்ற வேலையா இது? இன்ஸ்டா மூலம் டார்ச்சர்.. தாய் பரபரப்பு புகார்!