இன்றுடன் 42 நாட்கள் ஆகிட்டு! நாளுக்கு நாள் மரண போராட்டம்..! நேரில் என் மகளைக் கொடுக்க தயங்கினால்... கோயிலிலாவது விட்டுச் செல்லுங்கள்! செஞ்சி சிறுமியின் தாய் கண்ணீருடன் கதறல்..!!,
செஞ்சி அருகே ஆலம்பூண்டியில் 7 வயது ஹேமலதா மாயமாகி 42 நாட்களாகியும் துப்பு கிடைக்கவில்லை. மகளை மீட்டுத் தருமாறு தாய் பவானி கண்ணீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமாகி 42 நாட்களாகியும் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. சிறுமியை கண்டுபிடிக்க சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, மகளைப் பிரிந்து தவித்து வரும் தாய் பவானி கண்ணீர் மல்க வெளியிட்டுள்ள வீடியோ உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி எங்கே இருக்கிறார் என்ற தகவல் தெரியாமல் குடும்பத்தினர் தவித்து வரும் நிலையில், அவரை மீட்டுத் தருமாறு தாய் விடுத்த வேண்டுகோள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பிறந்தநாள் கொண்டாடிய மறுநாள் மாயமான சிறுமி
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் - பவானி தம்பதியின் இளைய மகள் ஹேமலதா (7). அப்பகுதியில் உள்ள ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த அக்டோபர் 11-ம் தேதி குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய சிறுமி, அன்று இரவு தூங்கச் சென்றார். ஆனால், மறுநாள் அதிகாலையில் அவரை வீட்டில் காணவில்லை.
இதையடுத்து சத்தியமங்கலம் போலீசார் சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். நீர்நிலைகள், கரும்புத் தோட்டங்கள், பாறை இடுக்குகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ட்ரோன் கேமராக்கள் உதவியுடன் தேடுதல் நடத்தியும் சிறுமி கிடைக்கவில்லை.
42 நாட்களாகியும் துப்பு கிடைக்காத சிபிசிஐடி விசாரணை
இந்த வழக்கு கடந்த மாதம் 21-ம் தேதி சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. டிஎஸ்பிக்கள் கீதா, வேல்முருகன் மற்றும் இன்ஸ்பெக்டர் ரேவதி உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையிலான தனிப்படையினர் ஆலம்பூண்டியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமியின் குடும்பத்தினர், உறவினர்கள், அண்டை வீட்டினர் மற்றும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தேடுதல் பணிகள் நடத்தப்பட்டுள்ளன. சந்தேகத்தின் அடிப்படையில் செங்கல் சூளை சாம்பலும் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
30 நாட்களுக்கும் மேலாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியும், சிறுமி மாயமாகி 42 நாட்கள் கடந்துள்ள நிலையிலும் இதுவரை உறுதியான தகவல் கிடைக்கவில்லை. சிறுமி உயிருடன் இருப்பதாக நம்பி பெற்றோர் காத்திருக்கும் நிலையில், அவர்களின் வேதனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
‘என் மகளை எங்காவது விட்டுச் செல்லுங்கள்’ - தாயின் கண்ணீர் வேண்டுகோள்
சிறுமியின் தாய் பவானி வெளியிட்டுள்ள வீடியோவில், “எனது மகள் மாயமாகி இன்றுடன் 42 நாட்களாகிவிட்டது. அவள் சாப்பிட்டாளா, என்ன செய்கிறாள் என்று தெரியாமல் நாங்கள் பசியும் பட்டினியுமாகத் தவித்துக் கொண்டிருக்கிறோம்” என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
“எனது மகளை யாராவது கடத்திச் சென்றிருந்தால், அவர்களிடம் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக்கொள்கிறேன். அவளை என்னிடம் கொண்டு வந்து ஒப்படைத்துவிடுங்கள். நேரில் கொடுக்கத் தயங்கினால் ஏதாவது ஒரு கோயிலிலாவது விட்டுச் செல்லுங்கள். அங்கிருப்பவர்கள் எங்களிடம் சேர்த்துவிடுவார்கள்” என்று அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
42 நாட்களாக மகளைத் தேடி தவித்து வரும் தாயின் இந்தக் கண்ணீர் வேண்டுகோள் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 40 நாட்களாக நீடிக்கும் மர்மம்! செஞ்சி சிறுமி வழக்கில் 10 பேரை சுற்றிவளைத்த சிபிசிஐடி..!!!