செஞ்சி சிறுமி மாயம் வழக்கில்.. மஞ்சுளா முதல் பெங்களூர் வரை லிங்க்! செங்கல் சூளை சாம்பல்.. அடுத்து ரவுடி ராஜதுரையை சுற்றி வளைத்த சிபிசிஐடி! விசாரணையில் அடுத்தடுத்த திருப்பம்..!!!
செஞ்சி அருகே 7 வயது ஹேமலதா மாயமான வழக்கில் 41 நாட்களாக துப்பு கிடைக்காத நிலையில், சிபிசிஐடி போலீசார் ஆலம்பூண்டியில் மீண்டும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டியில் 7 வயது சிறுமி ஹேமலதா மாயமாகி 41 நாட்கள் கடந்தும் அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதனால், சிபிசிஐடி போலீசார் விசாரணையை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளனர். சிறுமி மாயமானது தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சிலரிடம் மீண்டும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் 12-ம் தேதி வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானார். உள்ளூர் போலீசார் நடத்திய தேடுதல் மற்றும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் விசாரணையைத் தொடங்கி 31 நாட்கள் கடந்தும் சிறுமியின் நிலை குறித்து உறுதியான தகவல் கிடைக்கவில்லை.
இதையும் படிங்க: 40 நாட்களாக நீடிக்கும் மர்மம்! செஞ்சி சிறுமி வழக்கில் 10 பேரை சுற்றிவளைத்த சிபிசிஐடி..!!!
மஞ்சுளாவிடம் மீண்டும் விசாரணை
ஆலம்பூண்டி கிராமத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால், சுமார் 2 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள கேமரா பதிவுகளை போலீசார் ஏற்கனவே ஆய்வு செய்துள்ளனர். இதற்கிடையே, ஆலம்பூண்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக விசாரணை முகாமில், டிஎஸ்பிக்கள் கீதா மற்றும் வேல்முருகன் தலைமையிலான குழுவினர் மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
சிறுமி மாயமான நாளில் அழுகுரல் கேட்டதாகக் கூறிய எதிர்வீட்டுப் பெண் மஞ்சுளாவிடம் இன்று விரிவான விசாரணை நடத்தப்பட்டது. சிறுமியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மஞ்சுளாவின் மகன் சதீஷ் உடனிருந்ததும், அவரது உறவினர் ரேணு பெங்களூரில் தங்கி வேலை செய்து வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெங்களூர் மற்றும் பல்வேறு கோணங்களில் விசாரணை
சிறுமியின் உறவினர்கள் சிலர் பெங்களூரில் வசிப்பதால், அங்கு சிறுமி அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தனிப்படை போலீசார் பெங்களூர் சென்று விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாகவே மஞ்சுளாவிடம் மீண்டும் வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது.
மேலும், சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராஜதுரையை பரதன்தாங்கள் சுடுகாடு பகுதிக்கு அழைத்துச் சென்ற சிபிசிஐடி போலீசார், அங்கும் விசாரணை மேற்கொண்டனர். ஏற்கனவே சாம்பல் தடயங்கள் சேகரிக்கப்பட்ட செங்கல் சூளையின் உரிமையாளர் மற்றும் தொழிலாளர்களிடமும் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனால், விசாரணை மீண்டும் ஆலம்பூண்டி கிராமத்தைச் சுற்றியே தீவிரமடைந்துள்ளது. 41 நாட்களாக நீடிக்கும் சிறுமி மாயமான வழக்கில், அடுத்தகட்ட விசாரணையில் முக்கியத் தகவல்கள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.