39 நாட்கள் ஆகிட்டு..! நள்ளிரவில் அண்டை வீட்டு பெண்ணுக்கு கேட்ட அந்த சத்தம்.. அம்மா, அப்பாவுக்கு கேட்கவில்லை! ஏன்..? கதவு திறந்தது எப்படி? குடும்பத்தினர் ரகசியத்தை உடைக்கும் சிபிசிஐடி..!!!
விழுப்புரம் செஞ்சி அருகே 7 வயது ஹேமலதா மாயமான வழக்கில் ஒரு மாதமாகியும் துப்பு கிடைக்காத நிலையில், குடும்பத்தினரின் வாக்குமூல முரண்பாடுகளை சிபிசிஐடி ஆய்வு செய்கிறது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தில் 7 வயது சிறுமி ஹேமலதா மாயமான வழக்கில், ஒரு மாதத்தைக் கடந்தும் எந்தத் தெளிவான துப்பும் கிடைக்கவில்லை. பல்வேறு இடங்களில் தேடுதல் நடத்தியும் சிறுமி குறித்து தகவல் கிடைக்காத நிலையில், சிபிசிஐடி அதிகாரிகள் தற்போது குடும்பத்தினரின் வாக்குமூலங்களில் உள்ள முரண்பாடுகளை ஆய்வு செய்து வருகின்றனர். சிறுமி காணாமல் போன இரவு நடந்த சம்பவங்கள் குறித்து பெற்றோர் மற்றும் பாட்டியிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்படுகிறது.
ஒரு மாதத்தைக் கடந்தும் கிடைக்காத துப்பு
ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் மகள் ஹேமலதா. கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி இரவு பிறந்தநாளைக் கொண்டாடிய சிறுமி, தாய் மற்றும் பாட்டியுடன் வீட்டில் உறங்கியுள்ளார். மறுநாள் அதிகாலையில் அவர் காணாமல் போனது தெரியவந்தது.
இதையடுத்து காடுகள், கிணறுகள், வெளிமாவட்ட வாகனங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தேடுதல் நடத்தப்பட்டது. வெளியாட்கள் சிறுமியை கடத்தியதற்கான தடயங்கள் கிடைக்காத நிலையில், வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி அதிகாரிகள் குடும்பத்தினரின் ஆரம்பகட்ட வாக்குமூலங்களை மீண்டும் ஆய்வு செய்து வருகின்றனர்.
கதவு திறந்திருந்தது குறித்து தீவிர விசாரணை
சிறுமியின் தாய் பவானி, தந்தை வடிவேலு மற்றும் பாட்டி ஆகியோர் அளித்த தகவல்களில் சில வேறுபாடுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. சம்பவம் நடந்த அதிகாலையில் வீட்டின் முன்பக்கக் கதவு திறந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், இரவு கதவைப் பூட்டிவிட்டு உறங்கினார்களா அல்லது கதவு திறந்திருந்ததா என்பது குறித்து அதிகாரிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சம்பவம் நடந்த இரவு முதல் சிறுமி காணாமல் போனது தெரியவந்த நேரம் வரை நடந்தவற்றை வரிசையாக விவரிக்குமாறு மூவரிடமும் கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் கூறும் நேரங்கள், சம்பவ விவரங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டு விசாரணை நடத்தப்படுகிறது.
அழுகுரல் கேட்டதாக அண்டை வீட்டுப் பெண் தகவல்
சிறுமி மாயமான நள்ளிரவில், பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு குழந்தையின் 'அம்மா.. அம்மா..' என்ற அழுகுரல் கேட்டதாகக் கூறப்படும் தகவலும் விசாரணையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அண்டை வீட்டாருக்கே அந்தச் சத்தம் கேட்டதாகக் கூறப்படும் நிலையில், சிறுமிக்கு அருகில் படுத்திருந்த குடும்பத்தினர் அதை கவனிக்காதது ஏன் என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, குடும்பத்தினரிடமிருந்து பெறப்பட்ட செல்போன் அழைப்புத் தரவுகள் மற்றும் வங்கிக் கணக்குப் பரிவர்த்தனைகளையும் சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சம்பவம் நடந்த நாட்களில் வந்த மற்றும் சென்ற அழைப்புகள், குறிப்பாக நள்ளிரவு நேர அழைப்புகள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகத்திற்கிடமான பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாகவும் விசாரணை நடைபெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு கோணங்களில் தொடரும் விசாரணையில், சிறுமி மாயமானதற்கான பின்னணி குறித்து அதிகாரிகள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.