24 நாட்களுக்குப் பின் சிக்கிய சிசிடிவி காட்சிகள்...! செஞ்சி சிறுமி கோவிலில் ... பதறி அடித்துச் சென்ற சிபிசிஐடிக்கு கிடைத்த முக்கிய தடயம்! முழு நம்பிக்கையில் பெற்றோர்..!!!
விழுப்புரம் மாவட்டத்தில் 24 நாட்களாக மாயமான 7 வயது ஹேமலதாவைத் தேடும் பணி நாமக்கல் மாவட்டத்திலும் தீவிரமடைந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தில் மாயமான 7 வயது சிறுமி ஹேமலதாவைத் தேடும் பணி 24 நாட்களைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள தாதகிரி முருகன் கோவிலில் சிறுமியைப் போன்ற தோற்றம் கொண்ட குழந்தையைப் பார்த்ததாகப் பெண் ஒருவர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அங்கு விரைந்துள்ள தனிப்படை போலீசார் கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குப் பிறகு மாயமான சிறுமி
ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் மகள் ஹேமலதா என்கிற ஹேமாவதி. கடந்த அக்டோபர் 11-ம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடிய சிறுமி, அன்று இரவு தாய் மற்றும் பாட்டியுடன் வீட்டில் உறங்கினார். ஆனால், நள்ளிரவில் அவர் காணாமல் போனது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
உள்ளூர் போலீசார் சுமார் 10 நாட்கள் தேடியும் முக்கியத் தடயம் கிடைக்காததால், வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர், பாட்டி உள்ளிட்ட குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பழைய குற்றவாளிகள், அவர்களது தொடர்புகள், அப்பகுதியில் உள்ள சாமியார்கள், சுடுகாடுகள், காட்டுப் பகுதிகள் எனப் பல கோணங்களில் போலீசார் தேடுதல் பணியை விரிவுபடுத்தினர். சம்பவத்தன்று நள்ளிரவில் அந்தப் பகுதியைக் கடந்து சென்ற 14 நேஷனல் பெர்மிட் லாரிகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.
தாதகிரி முருகன் கோவிலில் கிடைத்த தகவல்
இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள தாதகிரி முருகன் கோவிலில் ஹேமலதாவைப் போன்ற தோற்றம் கொண்ட சிறுமியை வயதான தம்பதியினருடன் பார்த்ததாகப் பெண் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு தகவல் அளித்தார். இதையடுத்து தனிப்படை போலீசார் உடனடியாக நாமக்கல் சென்று விசாரணையைத் தொடங்கினர்.
சிறுமி கோவிலுக்கு வந்ததாகக் கூறப்படும் அக்டோபர் 29-ம் தேதி மற்றும் அதற்குப் பிந்தைய நாட்களின் சிசிடிவி காட்சிகளை போலீசார் சேகரித்துள்ளனர். கோவில் வளாகத்தில் பதிவான காட்சிகளில் சிறுமியின் நடை, உடை மற்றும் உடல் அடையாளங்கள் ஹேமலதாவுடன் ஒத்துப்போகிறதா என ஆய்வு செய்து வருகின்றனர்.
சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சிசிடிவி ஆய்வு
கோவில் வளாகத்துடன், அங்கு செல்லும் முக்கியச் சாலைகள், சந்திப்புகள் மற்றும் அருகிலுள்ள வீடுகள், கடைகளில் பொருத்தப்பட்டிருந்த 15-க்கும் மேற்பட்ட தனியார் சிசிடிவி கேமராக்களின் பதிவுகளையும் போலீசார் சேகரித்துள்ளனர். சந்தேகத்துக்குரிய நபர்கள் எந்த வாகனத்தில் வந்தனர், நாமக்கல் நகருக்குள் சென்றார்களா அல்லது மோகனூர், ராசிபுரம் வழியாகப் பயணித்தார்களா என்பதைக் கண்டறியும் முயற்சி நடைபெற்று வருகிறது.
மகள் உயிருடன் பத்திரமாக இருப்பார் என்ற நம்பிக்கையில் தாய் பவானி தொடர்ந்து காத்திருக்கிறார். நாமக்கல்லில் கிடைத்துள்ள புதிய தகவல் குடும்பத்தினரிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிசிடிவி ஆய்வின் முடிவுகள் இந்த வழக்கில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சிறுமி குறித்த உறுதியான தகவல் கிடைக்கும் வரை சிபிசிஐடி போலீசாரின் தேடுதல் தொடர்கிறது.
இதையும் படிங்க: செஞ்சி சிறுமியை அக்டோபர் 29 ஆம் தேதி கோயிலில் உயிருடன் பார்த்த அங்கன்வாடி ஊழியர்! சிபிசிஐடியிடம் சிக்கிய அடுத்தடுத்த அதிர்ச்சி உண்மை...!!!