செஞ்சி சிறுமியை அக்டோபர் 29 ஆம் தேதி கோயிலில் உயிருடன் பார்த்த அங்கன்வாடி ஊழியர்! சிபிசிஐடியிடம் சிக்கிய அடுத்தடுத்த அதிர்ச்சி உண்மை...!!!
செஞ்சியில் மாயமான சிறுமி ஹேமலதாவை நாமக்கல் தத்தகிரி முருகன் கோயிலில் பார்த்ததாக அங்கன்வாடி சமையலர் பவானி தெரிவித்துள்ளார். இதையடுத்து சிபிசிஐடி தனிப்படையினர் அங்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் மாயமான 7 வயது சிறுமி ஹேமலதாவைத் தேடும் பணியில் புதிய தகவல் கிடைத்துள்ளது. நாமக்கல் தத்தகிரி முருகன் கோயிலில் சிறுமியைப் பார்த்ததாக அங்கன்வாடி சமையலர் பவானி தெரிவித்துள்ளார். இதையடுத்து, சிபிசிஐடி தனிப்படை போலீசார் நாமக்கல் சென்று விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
நாமக்கல் கோயிலில் சிறுமியைப் பார்த்ததாகப் பெண் தகவல்
செஞ்சி அருகே மாயமான ஹேமலதாவை கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி நாமக்கல் தத்தகிரி முருகன் கோயிலில் பார்த்ததாகக் கோனானூர் அங்கன்வாடி சமையலர் பவானி கூறியுள்ளார். சுமார் 35 வயதுடைய இருவரும், 55 வயதுடைய ஒருவரும் சிறுமியுடன் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 24 நாட்கள் கடந்து கடலூரில் கிடைத்த துப்பு...! நள்ளிரவில் கடந்த லாரிகளை தூக்கிய சிபிசிஐடி...! செஞ்சி சிறுமி வழக்கில் திடுக்கிடும் திருப்பம்..!!!
குறிப்பாக, வயதான தம்பதியருடன் சிறுமி இருந்ததைப் பார்த்ததாகவும் பவானி பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அவர் அளித்துள்ள இந்தத் தகவல் தற்போது ஹேமலதா வழக்கில் முக்கியத் தடயமாகப் பார்க்கப்படுகிறது.
நாமக்கல்லில் சிபிசிஐடி தனிப்படை விசாரணை
பவானி தெரிவித்த தகவலின் அடிப்படையில், சிபிசிஐடி தனிப்படை போலீசார் உடனடியாக நாமக்கல் மாவட்டத்துக்குச் சென்றுள்ளனர். தத்தகிரி முருகன் கோயில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விசாரணை நடத்தி, சிறுமியுடன் இருந்ததாகக் கூறப்படும் நபர்கள் குறித்த விவரங்களைச் சேகரித்து வருகின்றனர்.
பவானி கூறிய தகவல்கள் மற்றும் அவர் தெரிவித்த அடையாளங்கள் மூலம் சிறுமியின் இருப்பிடத்தைக் கண்டறிய போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இருப்பினும், நாமக்கல் கோயிலில் பார்த்தது ஹேமலதாதான் என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. சிபிசிஐடி விசாரணைக்குப் பிறகே இதுகுறித்த தெளிவான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.