வாம்மா உன்னை ஊருக்குள் இறக்கி விடுகிறோம்.... வாய் பேச முடியாத பெண்ணுக்கு நடந்த கொடூரம்! பதுங்கியிருந்து 2 பேர் கைது.... புதுக்கோட்டையில் நடந்த அதிர்ச்சி...!!!
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணை காரில் கடத்திச் சென்று இருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேலை முடிந்து திரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
கறம்பக்குடி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண், தனது கிராமத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரிசி ஆலையில் கூலி வேலை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று மாலை வேலை முடிந்து பேருந்து நிறுத்தத்தில் நின்று வீட்டிற்குச் செல்ல காத்திருந்துள்ளார்.
அப்போது காரில் வந்த இரண்டு பேர், “ஊருக்குள் இறக்கி விடுகிறோம்” என்று கூறி அவரை அழைத்துள்ளனர். பெண் மறுத்தும், அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச் சென்றதாக கூறப்படுகிறது.
தனிமையான பகுதியில் பாலியல் பலாத்காரம்
தகவலின்படி, கறம்பக்குடி அருகே உள்ள குளக்கரை பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்ற இருவரும், அங்கு மாற்றுத்திறனாளி பெண் மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்பின் மயக்க நிலையில் இருந்த பெண்ணை கறம்பக்குடி – ஆலங்குடி சாலையில் வீசிவிட்டு அவர்கள் தப்பியோடியுள்ளனர். சில நேரம் கழித்து மயக்கம் தெளிந்த பெண் அழுது சத்தமிட்டதை கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்து அவரை மீட்டுள்ளனர். பின்னர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளி கைது
வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மணக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த கார் உரிமையாளரும் ஓட்டுநருமான சேகர் (53) மற்றும் அவரது நண்பரான கூலித்தொழிலாளி மாரிமுத்து (52) என்பதைக் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து மாரிமுத்துவை முதலில் கைது செய்த போலீசார், தலைமறைவாகி திண்டுக்கல்லில் பதுங்கியிருந்த சேகரையும் தனிப்படை மூலம் பிடித்து கைது செய்துள்ளனர். இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.