திருமணமான 4 மாதத்திலே புதுப்பெண் நெஞ்சுவழியால் இறந்ததாக கூறிய மாமியார்! ஆனால் இறுதியில் காத்திருந்த பெரிய ட்விஸ்ட்....! திடுக்கிடும் பின்னணி...!!!
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த புதுப்பெண் ஜீவலட்சுமி மரணம் தொடர்பாக கணவர் குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஜீவலட்சுமி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி 4 மாதங்களிலேயே அவர் உயிரிழந்த நிலையில், கணவர் குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: 16 வயதில் திருமணமான இளம்பெண்! கணவர் வீட்டில் நாளுக்கு நாள் நரக வேதனை.... வாந்தி எடுத்த மறுநாளே மரணம்! திருமணமான 2 வருஷத்தில் நேர்ந்த கொடூரம்!!!
காதலைத் தாண்டி நடந்த குடும்ப சம்மத திருமணம்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா புத்தளி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மஞ்சுநாதன் - அமிர்தலட்சுமி தம்பதியின் மூத்த மகள் ஜீவலட்சுமி, நர்சிங் படித்து வந்துள்ளார். இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே ஆக்கூர் கிராமத்தைச் சேர்ந்த ஜீவானந்தத்துக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது.
ஜீவலட்சுமியின் தாயார் அமிர்தலட்சுமியும், ஜீவானந்தத்தின் தாயார் கங்காவும் செய்யாறு சிப்காட் தொழிற்சாலையில் ஒன்றாக வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது ஏற்பட்ட பழக்கத்தின் அடிப்படையில், வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இரு குடும்பங்களின் சம்மதத்துடன் திருமணம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
உடலில் காயங்களை பார்த்து அதிர்ந்த பெற்றோர்
கடந்த 23-ஆம் தேதி மதியம், ஜீவலட்சுமி நெஞ்சுவலியால் உயிரிழந்துவிட்டதாக அவரது மாமியார் கங்கா தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கு சென்ற பெற்றோர் மற்றும் உறவினர்கள், ஜீவலட்சுமியின் உடலில் பல்வேறு காயங்களும், கழுத்தில் தூக்கில் தொங்கியதற்கான தழும்புகளும் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் விசாரித்தபோது, ஜீவலட்சுமி அடித்துத் துன்புறுத்தப்பட்டு பின்னர் தூக்கில் தொங்கவிடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வரதட்சணை கொடுமை புகார்
இதுகுறித்து ஜீவலட்சுமியின் தாயார் அமிர்தலட்சுமி, தூசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், திருமணமான சில நாட்களிலேயே கூடுதல் வரதட்சணை கேட்டும், பெற்றோர் வீட்டை எழுதி வாங்கி வருமாறும் கணவர் குடும்பத்தினர் தொடர்ந்து துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
மேலும், சாதிப் பெயரைச் சொல்லி அவமதித்ததுடன், மருமகன் ஜீவானந்தம், அவரது தம்பி தனுஷ், மாமியார் கங்கா மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து தாக்கி கொலை செய்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஜீவலட்சுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று காலை விசாரணைக்காக வந்த செய்யாறு சப்-கலெக்டர் அம்பிகா ஜெயினின் வாகனத்தை உறவினர்கள் முற்றுகையிட்டு, குற்றம்சாட்டப்பட்ட 5 பேரையும் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தினர்.
அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாருக்கும் உறவினர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. பின்னர், வரதட்சணை கொடுமை குற்றச்சாட்டில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.