பிறந்தநாள் கேக்கில் இருக்கும் மர்மம்... செஞ்சி சிறுமி வழக்கில் சிக்கிய மாப்பிள்ளை தம்பி...! பல கோணங்களில் பரபரப்பு விசாரணை..!!!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மாயமான 7 வயது சிறுமி ஹேமலதாவைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. சிபிசிஐடி போலீஸார் குடும்பத்தினர் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தில், பிறந்தநாள் கொண்டாடிய இரவே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி ஹேமலதா மாயமான வழக்கில் விசாரணை தீவிரமடைந்துள்ளது. உள்ளூர் போலீஸார் 8 தனிப்படைகள் அமைத்து 15 நாட்களாகத் தேடியும் சிறுமி குறித்த தகவல் கிடைக்கவில்லை. இதையடுத்து, வழக்கு சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
ஆலம்பூண்டியில் முகாமிட்டு விசாரணை
ஆலம்பூண்டியைச் சேர்ந்த வடிவேலு – பவானி தம்பதியின் மகள் ஹேமலதா, கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அன்றிரவு வீட்டில் உறங்கிய சிறுமி, அதிகாலையில் காணாமல் போனார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அளித்த தகவலின் பேரில் போலீஸார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: 7 வயது சிறுமி மாயமான வழக்கில் தீடீர் திருப்பம்! கண்ணீருடன் கதறும் தாய்... ஜோதிடர் சொன்ன அதிர்ச்சி தகவல்...!!!
தற்போது சிபிசிஐடி டிஎஸ்பிக்கள் கீதா, வேல்முருகன் தலைமையிலான குழுவினர் கிராமத்தில் முகாமிட்டுள்ளனர். ஆலம்பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தற்காலிக விசாரணை மையமாகப் பயன்படுத்தப்படுகிறது. கடந்த 5 நாட்களாக அங்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சிறுமியின் தாய் பவானியிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து, சிறுமியின் பாட்டி சாந்தியிடமும் அன்றைய இரவு நடந்த நிகழ்வுகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
பிறந்தநாள் கேக் வாங்கிக் கொடுத்தவரிடம் விசாரணை
இந்த வழக்கில், சிறுமியின் மூத்த சகோதரிக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்ட தினேஷின் குடும்பத்தினரிடமும் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தினேஷின் தாய் அஞ்சலா மற்றும் அவரது தம்பி கார்த்தி ஆகியோர் விசாரணை மையத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
சிறுமி காணாமல் போன அக்டோபர் 11-ஆம் தேதி, ஹேமலதாவுக்குப் பிறந்தநாள் கேக் வாங்கிக் கொடுத்தவர் கார்த்தி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கேக் கொடுக்க வந்தபோது வீட்டில் நடந்த உரையாடல், அங்கு இருந்த நேரம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையின் அடிப்படையில் ஏதேனும் முக்கியத் தகவல் கிடைத்துள்ளதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
பல கோணங்களில் தொடரும் தேடுதல் பணி
இதற்கிடையே, ஆலம்பூண்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்கெனவே குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள், சந்தேகத்திற்குரிய நபர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோரின் விவரங்களையும் சிபிசிஐடி போலீஸார் சேகரித்து விசாரித்து வருகின்றனர்.
சிறுமி கடத்தப்பட்டாரா, குடும்பப் பிரச்சினை ஏதேனும் காரணமாக இருக்கிறதா அல்லது வேறு பின்னணி உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது. இருப்பினும், சிறுமி மாயமானதற்கான காரணம் இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. ஹேமலதாவைக் கண்டுபிடிக்க போலீஸார் தொடர்ந்து விசாரணை மற்றும் தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.