ரயிலில் கிடந்த சிவப்பு நிற சூட்கேஸ்! திறந்த போலீசுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி.... ஆண், பெண் சேர்ந்து செய்த அந்த காரியம்! திடுக்கிடும் பின்னணி...!!!
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் சென்னை கூடுவாஞ்சேரி வீட்டில் கொலை நடந்தது அம்பலம்; இருவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல்.
சென்னை சென்ட்ரலில் இருந்து புதுடெல்லி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் கண்டெடுக்கப்பட்ட சிவப்பு நிற சூட்கேஸ், கொடூர கொலை வழக்கை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. ஆக்ராவில் அந்த சூட்கேஸை திறந்தபோது மனித உடல் பாகங்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆக்ரா போலீசாரும் தமிழக ரயில்வே போலீசாரும் இணைந்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
சிசிடிவி காட்சிகளில் சிக்கிய ஆண், பெண்
சூட்கேஸ் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அனுப்பப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், அங்குள்ள 350-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் ஒரு ஆணும் பெண்ணும் சிவப்பு சூட்கேஸுடன் ரயில் நிலையத்துக்கு வந்து, அதை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்றிவிட்டு வெளியேறியது தெரியவந்தது. பின்னர் அவர்கள் கூடுவாஞ்சேரி நோக்கிச் செல்லும் மின்சார ரயிலில் சென்றதாக போலீசார் கண்டறிந்தனர்.
இதையும் படிங்க: அம்மாவை கொலை செய்து வாட்ஸப்பில் போட்டோ அனுப்பிய மகன்.. கதறிய குடும்பம்.!
காட்சிகளை தொடர்ந்து ஆய்வு செய்தபோது, சந்தேக நபர்கள் ஆட்டோவில் ஏறி மசூதி தெருவில் உள்ள ஒரு வீட்டுக்குச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், பூட்டப்பட்டிருந்த வீட்டை திறந்து சோதனை நடத்தினர்.
வீட்டுக்குள் கொலை நடந்ததற்கான தடயங்கள்
வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கொலை நடந்ததற்கான பல்வேறு தடயங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்தவரின் உடல் பாகங்களை தனித்தனியாக பிரித்து, ஒரு பகுதியை சூட்கேஸில் வைத்து ஆக்ராவுக்கு ரயில் மூலம் அனுப்பியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், மீதமிருந்த உடல் பாகங்களை மறைப்பதற்காக பெரிய பாத்திரத்தில் மைதா மாவு மற்றும் காய்கறிகளுடன் சேர்த்து சமைக்க முயன்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கொலையில் உயிரிழந்தவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாத் நிஷா என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தாம்பரம் பகுதியில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் அவர் வேலை செய்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவருடன் அந்த வீட்டில் தங்கியிருந்த ஒரு பெண்ணும் ஆணும் சேர்ந்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
தலை கிடைக்காததால் தேடுதல் தீவிரம்
ஹயாத் நிஷாவின் தலை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், உயிரிழந்த பெண்ணின் மகனிடமும் தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து முக்கிய தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
தலைமறைவாக உள்ள ஆண் மற்றும் பெண்ணை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நகை, பணத்துக்காக கொலை நடந்ததா, அல்லது தனிப்பட்ட முன்விரோதம் உள்ளிட்ட வேறு காரணங்கள் உள்ளனவா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். கூடுவாஞ்சேரி கொலை தொடர்பான விசாரணையில் கிடைக்கும் புதிய தகவல்களின் அடிப்படையில் வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
ரயிலில் கிடைத்த சிவப்பு சூட்கேஸ் மூலம் தொடங்கிய விசாரணை, சென்னை புறநகர் பகுதியில் நடந்ததாக கூறப்படும் கொலையின் பின்னணியை வெளிக்கொண்டு வந்துள்ளது. தலைமறைவாக உள்ள இருவரும் சிக்கிய பிறகே கொலைக்கான முழுமையான காரணமும், சம்பவத்தின் பின்னணி குறித்த தகவல்களும் தெரியவரும் என போலீசார் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க: கல்யாணம் பண்ணிக்கலாம்.. இளைஞரிடம் ஆசையாக பேசி ரூ.14 லட்சம் கறந்த இளம்பெண்.!