எச்சரித்த உளவுத்துறை... தாராபுரத்தில் இறங்கி அடித்த முதல்வர் விஜய்! பின்னணியில் இருக்கும் ரகசியம்..!!!
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் முதல்வர் விஜய் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தவெகவின் அரசியல் கணக்கு மற்றும் வெற்றி வியூகம் கவனம் பெற்றுள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் தமிழக அரசியலில் கவனம் ஈர்த்துள்ளது. இரு தொகுதிகளிலும் முதல்வர் சி. ஜோசப் விஜய் நேரடியாக களமிறங்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கிராமங்களில் நீண்ட நேர பிரச்சாரம், பல மணி நேர ரோட்ஷோ, சாலையோர சந்திப்புகள் என அவரது தேர்தல் பயணம் வேகம் பெற்றுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் தீவிரமாக பிரச்சாரம் செய்யவில்லை என்ற விமர்சனங்களுக்கு மாறாக, இந்த முறை விஜய் காட்டும் வேகம் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இரு தொகுதிகளிலும் பெரிய வெற்றிக்கு தவெக கணக்கு
தவெகவை பொறுத்தவரை இந்த இடைத்தேர்தல் இரண்டு சட்டமன்ற இடங்களை கைப்பற்றுவதற்கான போட்டி மட்டுமல்ல. குறிப்பாக தாராபுரத்தில் அதிமுகவின் உள்ளூர் செல்வாக்கும் சமூக ரீதியான அரசியல் கணக்குகளும் போட்டியை கடுமையாக்கியுள்ளன. அதனால் சாதாரண வெற்றியை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதில் கட்சித் தலைமை தீவிரமாக உள்ளது. விஜய்க்கான மக்கள் ஆதரவு தொடர்ந்து வலுவாக இருப்பதை தேர்தல் முடிவு மூலம் நிரூபிக்க வேண்டும் என்பதே தவெகவின் முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகிறது.
தனிப்பெரும்பான்மையை நோக்கி விஜய்யின் அரசியல் வியூகம்
2026 பொதுத்தேர்தலில் 107 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 120 உறுப்பினர்களின் பலத்தைக் கொண்டு ஆட்சியமைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் கூட்டணியை சாராமல் சட்டமன்றத்தில் தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை சொந்த பலத்தில் பெற வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே தாராபுரம் தொகுதியில் நிலவரம் சாதகமாக இல்லை என்ற உளவுத்துறை எச்சரிக்கையும் விஜய்யின் நேரடி களப்பணிக்கு காரணமாக கூறப்படுகிறது.
அதிமுகவில் இருந்து விலகியவர்களுக்கு வாய்ப்பு
கடந்த மே 13-ம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுகவைச் சேர்ந்த 47 எம்.எல்.ஏ.க்களில் 25 பேர் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்களில் 5 பேர் மீண்டும் அதிமுகவுக்கு திரும்பிய நிலையில், 6 பேர் அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைந்தனர். இந்த பின்னணியில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி அதிருப்தியை பயன்படுத்தும் வகையில், அக்கட்சியில் இருந்து விலகிய மரகதம் குமரவேல் மற்றும் பி. சத்யபாமா ஆகியோரை மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் தவெக வேட்பாளர்களாக விஜய் களமிறக்கியுள்ளார்.
இரு தொகுதிகளிலும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தால், அதிமுகவில் இருந்து மேலும் பல எம்.எல்.ஏ.க்கள் தவெக பக்கம் வருவதற்கான அரசியல் சூழல் உருவாகும் என்பது விஜய்யின் கணக்காக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு பிரதான திராவிட கட்சிகளையும் நீண்ட கால அரசியல் போட்டியில் பின்னுக்கு தள்ளும் திட்டத்திலும் இந்த இடைத்தேர்தல் முக்கியமானதாக கருதப்படுகிறது.
இதற்கிடையே தாராபுரத்தின் கிராமப்புறங்களில் மாட்டு வண்டி ஓட்டியும், மதுராந்தகத்தில் வயலில் இறங்கி டிராக்டர் இயக்கியும் விஜய் பொதுமக்களை நேரில் சந்தித்து வருகிறார். மேடை பிரச்சாரத்தை தாண்டி அடித்தட்டு மக்களிடம் நேரடியாக செல்வதன் மூலம் ஆதரவை உறுதி செய்யும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. தனிப்பெரும்பான்மைக்கான அரசியல் கணக்கும், நேரடி மக்கள் அணுகுமுறையும் இணைந்துள்ள நிலையில், விஜய்யின் இந்த வியூகம் எந்த அளவுக்கு பலன் அளித்துள்ளது என்பது அக்டோபர் 9-ம் தேதி வெளியாகும் இடைத்தேர்தல் முடிவில் தெரியவரும்.
இதையும் படிங்க: என்கிட்ட சொல்லாமல் இதை எப்படி நீங்க செய்யலாம்? ஆதவ் அர்ஜுனாவிடம் போனை போட்டு எகிறிய விஜய்! பின்னணி என்ன? கடும் கோபத்தில் முதல்வர் விஜய்!!!