விஜய் தலைமையில் புதிய கூட்டணி உதயம்! புதிய பெயர்... புதிய அரசியல் கணக்கு!
விஜய் தலைமையில் புதிய கூட்டணி உதயம்! புதிய பெயர்... புதிய அரசியல் கணக்கு!
தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் அமைந்துள்ள கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ என பெயரிடப்பட்டுள்ளது.
சென்னை பனையூரில் நடைபெற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்), மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணிக்கு பெயர் சூட்டுவதுடன், எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து செயல்படுவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: சட்டப்பேரவை பேச்சால் வெடித்த அரசியல் மோதல்! முதல்வர் விஜய்க்கு எதிராக களமிறங்கிய திமுக!
முன்னதாக, செப்டம்பர் 5-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர், செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என்றும், கூட்டணிக்கு பெயர் சூட்டி அதனை வலுவான அணியாக உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். மேலும், மதச்சார்பற்ற சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட வலுவான கூட்டணியாக இது அமைய வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இதனிடையே, கூட்டணிக்கு தற்போது ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ என பெயரிடப்பட்டிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. கூட்டணிக் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் அரசியல் வியூகங்கள் குறித்து தொடர்ந்து ஆலோசனைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.